Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பேரறிவாளன் விடுதலை வழக்கில் இன்று தீர்ப்பு!
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.
IPL 2022: ஹைதராபாத் அணி திரில் வெற்றி
ஐபிஎல் போட்டியில் நேற்று மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. 194 ரன்கள் இலக்குடன் ஆடிய மும்பை அணி, 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன்மூலம் ஹைதராபாத் அணி 12 புள்ளிகளுடன் பிளே ஆஃப்-க்கான வாய்ப்பிலும் நீடிக்கிறது.
தொடர்ந்து மும்பையில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா – லக்னோ அணிகள் மோதுகின்றன.
Tamil News Latest Updates
‘தலித் உண்மைகள்‘ புத்தக வெளியீட்டு விழா!
இந்தியாவில் தலித் சினிமா’ என்ற கட்டுரையில் திமுகவின் காலம் என்பது முற்போக்கு, புரட்சிக் கருத்தியல் படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றிபெறும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிய காலமாக இருந்ததாக பா.ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில்தான் அம்பேத்கரின் கனவு செயல் வடிவம் பெறுகிறது. அம்பேத்கரின் கனவான மக்களாட்சி குடியரசு காப்பாற்றப்பட வேண்டும் என ‘தலித் உண்மைகள்’ புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது வழக்குப்பதிவு!
‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் வன்னிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்திருப்பதாக, ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவனர் சந்தோஷ் புகாரளித்திருந்தார். மேலும் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்ககோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தை நாடியிருந்தார். கடந்த 29-ம் தேதி வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மே.17 அன்று, வேளச்சேரி காவல் நிலையத்தில் ‘ஜெய்பீம்’ திரைப்பட இயக்குநர் ஞானவேல், நடிகர் சூர்யா மீது 295 (A) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைக்கு நிவாரண பொருட்கள் இன்று அனுப்பிவைப்பு!
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில், 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர், 137 வகையான அத்தியாவசிய மருந்து பொருட்கள் கப்பல் மூலம் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் நிவாரண பொருட்கள் கப்பலை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கர்நாடகாவில் ராட்சத குழாய் பதிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்கள் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை சிபிஐ கைது செய்தது
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ரூ. 2,566 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
நெல்லை கல்குவாரி விபத்தில் பாறைகள் இடையே சிக்கியுள்ள 2 தொழிலாளர்களை மீட்கும் பணி 4-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரித்த நிலையில், ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரிக்கும், பொதுமக்கள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் சொந்த மின் உற்பத்தி 50 சதவீதத்தை எட்டும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் தக்காளி வரத்து குறைந்த நிலையில், கிலோ ரூ. 85 வரை விற்பனை செய்யப்படுகிறது.