பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து விஜய் நடித்து வரும் அவரது 66 ஆவது படத்தின் படப்பிடிப்பு தெலங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு பங்கேற்பதற்காக அங்கு சென்று விஜய், யாரும் எதிர்பாராத விதமாக இன்று (மே 18) தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்தார்.
சந்திரசேகர ராவின் மருமகன் சந்தோஷ் குமார் ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பின்போது சந்திரசேகர் ராவுக்கு விஜய் மலர்கொத்து வழங்கினார். பதிலுக்கு அவர் விஜய்க்கு நினைவு பரிசை வழங்கினார்.
பதிலுக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ், விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கினார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
சினிமா சூட்டிங்கிற்கு போன இடத்தில், அந்த மாநில முதல்வரை விஜய் சந்தித்துள்ளதை வழக்கம் போல் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லி எளிதாக கடந்து விட முடியாது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
காரணம், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் அல்லாத, தமது தலைமையில் மூன்றாவது அணியை அமைக்கும் முனைப்பில் உள்ளார் சந்திரசேகர் ராவ். பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள அவருக்காக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர் ராவின் ராஷ்ட்ரிய ஜனதா சமிதி கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் தற்போது பணியாற்றி வருகிறார்.
அதேசமயம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை விமர்சித்து கருத்துகளை கூறியதால் கடந்த காலங்களில் பல்வேறு சிக்கல்களை விஜய் சந்தித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில், பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்தாக பரபரப்பாக பேசப்பட்டது. இதனை இருதரப்பினரும் மறுக்காத நிலையில் அவர் சந்திரசேகர் ராவை இன்று சந்தித்துள்ளார்.
அதாவது சினிமா பாணியில் சொல்ல வேண்டுமென்றால் இயக்குநர் பிரசாந்த் கிஷோரின் பின்னணியில், சந்திரசேகர் ராவை விஜய் சந்தித்துள்ளாரா? இந்த சந்திப்புக்கு பின் எதிர்வரும் 2024 எம்பி தேர்தலில் மோடி எதிரான நிலைப்பாட்டை விஜய் மக்கள் இயக்கமும் தமிழகத்தில் எடுக்க உள்ளதா? லிஜய் ஸ்டாலினுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா? இப்படி பல்வேறு கேள்விகளை சந்திரசேகர் ராவ் – விஜய் சந்திப்பு எழுப்பி உள்ளது.