புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயிரி எரிபொருள் குறித்த 2018 தேசிய கொள்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய உயிரி எரிபொருள் ஒருங்கிணைப்பு குழுவில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, நாடு முழுவதும் 01.04.2023 முதல் 20 சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு முதல் இது 20 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது.
பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பது என்ற இலக்கை, 2030 ஆம் ஆண்டு என்பதில் இருந்து 2025-2025 ஆம் ஆண்டு என மாறுதல் செய்யப்பட்டது.
மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த பிரிவுகள் ஆகியவற்றில் இந்தியாவில் உற்பத்தி திட்டத்தின் கீழ் நாட்டில் உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தல், குறிப்பிட்ட பிரிவுகளில் உயிரி எரிபொருள் ஏற்றுமதிக்கு அனுமதியளித்தல் போன்றவை உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முக்கிய திருத்தங்களாகும்.
இதன் மூலம் 2047 ஆம் ஆண்டுக்குள் எரிசக்தி துறையில் சுதந்திரம் பெற்ற நாடாக இந்தியா மாற வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கு திட்டத்திற்கு இது வலுச் சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்…
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் பங்குகளை விற்க முடிவு