அண்மையில் உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடமாக நம்பப்படும் ஷாஹி இத்கா மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவிடக் கோரி, மதுரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல், வாரணாசியிலுள்ள கியான்வாபி மசூதி தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உதித்தரவின்பேரில் விசாரணைக்குழு நடத்திய ஆய்வில், மசூதியில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், பா.ஜ.க-வை சேர்ந்த முன்னாள் ராஜ்ய சபா எம்.பி-யான சுப்பிரமணியன் சுவாமி, “8 வருடங்களாக மோடி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெரும்பான்மையோடு இருந்தபோதிலும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ திரும்பப்பெறத் தவறிவிட்டார். இது அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டதுதான்” என ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமியின் இத்தகைய கருத்துக்கு, பா.ஜ.க-வைச் சேர்ந்த தஜிந்தர் பால் அவரை விமர்சித்து கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து இந்து விவகாரங்களிலும் பொய் சொல்லக்கூடிய துரோகி என ஒருவர் இருப்பின், அதிலும் மதுரா, அயோத்தியா, காசியுடன் தொடர்புடையவர் என்றால் அது சுப்பிரமணியன் சுவாமிதான். சுப்பிரமணியன் சுவாமியின் இந்து விரோத செயல்களை, அனைத்து தேசபக்தி இந்தியர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய நேரமிது. 6 ஆண்டுகளாக ராஜ்ய சபாவில் எம்.பி-யாக இருந்தபோது, வழிபாட்டுத் தலங்கள் சட்டம் பற்றி கண்டுகொள்ளாத சுப்பிரமணியன் சுவாமி, தற்போது அதன் பிரச்னைகளை எழுப்புகிறார்” எனக் காட்டமாகக் கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.