அயோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்துள்ளனர் என்று கூறியுள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் கருத்துகளால் ட்விட்டர் குலுங்கிய நிலையில் அவருக்கு அங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும், இல்லையேல் செய்திப் பேட்டியிலும் தனது கருத்துகளைத் தெரிவித்து வாதத்தைத் தொடங்கிவைப்பார் கங்கனா ரணாவத்.
அப்படித்தான் அண்மையில் காசி விசுவநாதர் கோயிலுக்குச் சென்ற அவரிடம் கியான்வாபி மசூதி காசி கோயிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கும் அதன் நீட்சியாக நடைபெறும் சர்ச்சைகள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கங்கனா ரணாவத், அயோத்தியில் எங்கும் எதிலும் ராமர் நிறைந்திருக்கிறார். அதுபோலவே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் எங்கும், எதிலும் நிறைந்துள்ளனர் என்று சொன்னார். அத்துடன், ஹர்ஹர் மஹாதேவ் என்றும் முழங்கினார்.
இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“There’s Lord Krishna in every particle of Mathura & Lord Ram in every particle of Ayodhya. Similarly, there’s Lord Shiva in every particle of Kashi. He doesn’t need a structure, he resides in every particle,” Kangana Ranaut when asked about Shivling claim site at Gyanvapi mosque pic.twitter.com/xFzdaT9lAb
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 19, 2022
முன்னதாக, கியான்வாபி மசூதியில் மேற்கொள்ளப்பட்ட வீடியோ பதிவு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து உத்தரப் பிரதேச நீதிமன்றத்தில் ஆய்வுக் குழு சமர்ப்பித்தது. இந்த அறிக்கை 10 முதல் 12 பக்கங்கள் கொண்டது எனத் தெரியவந்துள்ளது. இத்துடன் வீடியோ சிப்பும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வில், தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தப்படுத்தும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஒசுகானாவில் உள்ள சிவலிங்கத்தை அளக்கவும், அதை சுற்றியுள்ள சுவரை உடைக்கவும் இந்துக்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த விசாரணையை நாளை வரை ஒத்திவைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இத்தகைய நிலையில் தான் கங்கனா தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.