இன்று, `ஜனநாயக ஆட்சிக்கு குடும்ப அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தல்’ எனும் கருத்தரங்கில் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “குடும்ப அரசியல் கட்சிகள், ஒரு நபரின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. இத்தகைய கட்சிகளுக்கு சித்தாந்தம் கிடையாது. மேலும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானவை.
பிறப்பின் அடிப்படையிலான எந்தவொரு பாகுபாட்டையும் அரசியலமைப்பு தடைசெய்கிறது. ஆனால், இந்த குடும்ப அரசியல் கட்சிகளில் தலைமை என்பது பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மற்றவை புறக்கணிக்கப்படுகின்றன. தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்த மாநிலக் கட்சிகளின் விருப்பத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடம் கொடுக்கவில்லை.
ஆனால் பா.ஜ.க, வேற்றுமையில் ஒற்றுமையை நம்புகிறது. மத்திய ஆட்சியை வலுவாக வைத்திருக்கும்… அதே வேளையில் மாநில அளவிலும் மாநிலக் கட்சிகளின் விருப்பத்துக்கு இடம் கொடுக்கிறது. மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சி தேசியமாகவோ அல்லது இந்தியராகவோ ஜனநாயகமாகவோ இல்லை.
அது இப்போது ‘பாய்-பஹான்’ (குடும்ப) கட்சியாக மட்டுமே நிற்கிறது. ஏனென்றால் தற்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர்தான் கட்சியின் நிகழ்வுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். உட்கட்சியிலும் ஜனநாயகம் பேணப்படும் ஒரே கட்சி பா.ஜ.க மட்டுமே” எனப் பேசினார்.