கோவை:
கோவையில் இன்று கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட தொழில்முனைவோருடன் முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
தொன்மையான பாரம்பரியமும் தொழில் வளமும் மிகுந்த இந்த கோவையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த தமிழக தொழில்துறைக்கு நன்றி.
தொழில்துறையை தேர்ந்தெடுத்து அதில் உணர்வு பூர்வமாக ஈடுபட்டு, கடும் உழைப்பையே முதலீடாக வழங்கி இன்று தொழில் அதிபர்களாக பல ஆயிரம் நபர்களுக்கு வேலை வழங்கி, இப்பகுதி செழிக்க சிறப்பான பங்களிப்பு வழங்கி வருவதற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
தொழில் நிறுவனம் நடத்துவதன் மூலமாக மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பொருளாதார சேவை ஆற்றி வரும் உங்கள் பணி மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
இதமான தட்ப வெப்பமும், மிதமான குளிர்ச்சியும் கொண்ட நகரம் கோவை. இது மக்களின் பழக்க வழக்கங்களிலும் தெரியும். அந்த வகையில் குணத்தால், மனத்தால், இதமான கோவைக்கு வந்திருக்கிறேன். தமிழகத்தின் 2வது பெரிய நகரம் என்றால் அது கோவை மாநகரம் தான்.
ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு, மோட்டார் பம்பு, வெட்கிரைண்டர், தங்க நகை, ஆபரணங்கள் உற்பத்தி என அனைத்தும் சிறந்த நகரம் கோவை தான்.
இந்த தொழில் தான் என்று சொல்லாமல், பல்வேறு தொழில்களின் மையமாக கோவை உள்ளது. கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை. அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என்ற பெயரை பெற்ற நகரம் கோவை.
கோவையில் 700க்கும் மேற்பட்ட வெட்கிரைண்டர் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையான வெட்கிரைண்டர்கள் தயாரித்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இவற்றிற்கு கோவை வெட்கிரைண்டர் என புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதே இதன் பெருமைக்கு சிறந்த சான்றாகும்.
தற்போது கோவை மாவட்டம் தகவல் தொழில்நுட்ப துறையில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னைக்கு அடுத்து தமிழ்நாட்டில் 2வது பெரிய மென்பொருள் தயாரிப்பு நகரமாக கோவை நகரம் உருப்பெற்றுள்ளது.
இந்த நகரத்தில் டைடல் பூங்கா, பிற திட்டமிட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மூலம் உலகளவில் அவுட் சோர்சிங் நகரத்தில் முக்கிய இடத்தை கோவை பெற்றுள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து இதுவரை 5 முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துள்ளது. தமிழகத்தில் நடந்த 4 மாநாடுகளில் ஒன்று கோவையில் நடந்தது. ஏனென்றால் தமிழ்நாட்டின் தொழில்துறையின் முக்கிய தூண்களில் ஒன்று கோவை மாவட்டம் என்பதற்காக தான்.
கோவை மாநகர வளர்ச்சிக்கு மேற்கு மண்டல தொழில் முன்னேற்றத்திற்கு விமான நிலைய விரிவாக்கம் அவசியம் தேவை. இதனை உணர்ந்து விமான நிலையத்தை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கான பணிகளை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
இந்த பணிகளுக்கான திட்டம் வகுக்கப்பட்டு, நிலம் எடுப்பு பணி 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டு ஆட்சியில் சரியான முன்னேற்றம் இல்லாமல் தொய்வடைந்திருந்த பணிகளை முடுக்கி விட்டு, இதற்காக ரூ.1,132 கோடியை ஒதுக்கியுள்ளோம். இந்த பணி விரைவில் முடிக்கப்பட உள்ளது. இதன் மூலம் சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் சிறந்த பன்னாட்டு விமான நிலையமாக கோவை விமான நிலையம் உயர்த்தப்படும் என்பதை உங்களுக்கு உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இந்த அரசின் லட்சியத்தை அடைய கோவையின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமையும். வளம் மிக்க இந்த மாவட்டத்தை மேலும் வலுப்படுத்த புத்தாக்கம், தகவல் தொடர்பு நுட்பம், வான்வெளி, பாதுகாப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு வளர்ந்து வரக்கூடிய தொழில்நுட்பங்களான புதிய மையமாக நியூ அப் பார் என்ஜினியரிங் டெக்னாலஜி கோயம்புத்தூர் உருவாக்கப்படும். இதற்காக தகுந்த ஆலோசகரை நியமித்து திட்டம் தயாரிக்கப்படும். இந்த விரிவான திட்டம் கோவைக்கான புதிய பெரும் திட்டமாக இருக்க கூடிய நியூ மாஸ்டர் பிளான் ஒருங்கிணைக்கப்படும்.
கோவை நகருக்கான கட்டமைப்பு தேவைகளுக்கான எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், இந்த பகுதிக்கான புதிய பெரும் திட்டம் நேஸ்ட்ரோ பிளான் உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதகுலத்தை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற அரசின் தொலைநோக்கு பார்வையை செயலாக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ, தமிழ்நாடு முன்னேற்ற நிறுவனம் சிப்காட், தமிழ்நாடு சிறு, குறு வளர்ச்சி நிறுவனம் டேன்சிட்கோ உள்ளிட்ட அரசு துறைகளுடன் இணைந்து மாநிலத்தில் உள்ள பல்கைலைக்கழக வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் நிறுவ ஊக்குவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு 69 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடுகளும், 2 லட்சத்து 25 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய வகையில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொழில்துறையினர் வளர்ச்சிக்கு அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளுக்கு அத்தாட்சியாக அண்மையில் ஐக்கிய அரபு நாடுகளின் பொருளாதார அமைச்சகத்தால் ஆண்டுதோறும் நடத்தப்படும் முதலீடுகளுக்கான சந்திப்பில் நமது தொழில்துறையின் வழிகாட்டி நிறுவனம் ஆசியா, ஒசியானியா மண்டலத்தின் சிறந்த முதலீடு முகமைக்கான விருதை வென்றுள்ளது.
நமது மாநிலம் தொடர்ந்து தொழில் வளர்ச்சி பெற்று, அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ வேண்டும். அதுமட்டுமல்ல தெற்காசியாவிலேயே முதலீடுகள் மேற்கொள்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
அரசு ஏற்படுத்தியுள்ள இந்த வசதி வாய்ப்புகளை தொழில்துறையினர் பயன்படுத்தி மென்மேலும் வளர்ச்சி பெற உங்களை கேட்டு கொள்கிறேன்.
தொழில்துறையில் சிறந்த கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதில் சிறு, குறு நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேறத்திற்கு பெரும் பங்காற்றகூடிய இந்த நிறுவனங்கள் முன்னேற்றத்திற்கு அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. சிறு, குறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் முதலிட்டு மானியத்திற்கான நிதி ஒதுக்கிடு, கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவாக ரூ.360 கோடி ஒதுக்கப்பட்டு, 3 ஆயிரத்து 545 நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க சுயதொழில் வேலைவாய்ப்பு திட்டங்களின் கீழ் கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 568 பயனாளிகளுக்கு ரூ.1101 கோடி ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசு மானியம் 275 கோடியே 38 லட்சம் ரூபாய் ஆகும்.
சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டை விட 49 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, ரூ.9 ஆயிரத்து 11 கோடி 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் சொத்து பிணையில்லா கடன் பெற ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு கடன் உத்தரவாத திட்டம் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களின் முக்கிய தேவையான தொழில் மனைகளை குறைந்த விலையில் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக சிட்கோ நிர்வகித்து வரும் 122 தொழிற்பேட்டைகளில் அதிக விலை மதிப்பின் காரணமாக 371 ஏக்கர் பரப்பளவில் 1,341 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது.
இதனை நிவர்த்தி செய்யும் விதமாக திருத்திய மனை மதிப்பீட்டு கொள்கையின்படி குறிப்பிட்ட தொழிற்பேட்டையில் மனை மதிப்பானது 5 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒராண்டில் மட்டும் ரூ.140 கோடியே 14 லட்சம் மதிப்பிலான 553 தொழில்மனைகள், 17தொழிற்கூட அலகுகள் தொழில்முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
5 மாவட்டங்களில் 81.85 ஏக்கர் பரப்பளவில் 162 தொழில் மனைகளுடன் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 மாவட்டங்களில் 394 ஏக்கர் பரப்பளவில் 218 கோடி மதிப்பில் 4 தொழிற்பேட்டைகள் உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவை உள்பட மேற்கு மண்டலத்தை பொறுத்த மட்டும் தொழில் நிறுவனங்களை பாதுகாத்திட தனி கவனம் செலுத்தி வருகிறது. கடந்த நிதியாண்டில் கோவையை சேர்ந்த 364 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 32 கோடி 57 லட்சம் ரூபாய் முதலீடு மானியம் வழங்கப்பட்டுள்ளது. கோவை சொலவம்பாளையம் கிராமத்தில் 42.47 ஏக்கர் பரப்பளவில் ரூ.18 கோடியே 13 லட்சம் மதிப்பில் புதிய தனியார் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ஏற்றுமதி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட 10 ஏற்றுமதி மையங்களில் 4 மையங்கள் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூரில் அமைக்கப்படும். கயிறு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
கோவையில் தமிழக கயிறு மேம்பாட்டு நிறுவனம் அமைக்கப்படும். இதற்கு முதற்கட்டமாக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் புத்தொழில் வளர்ச்சிக்காக 3 மையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஈரோட்டில் மண்டல புத்தொழில் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் ரூ.3.5 கோடி மதிப்பில் மஞ்சள், தூள் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமத்திற்கான பொது வசதி மையம் அமைக்கப்படும். பவானியில் ரூ.3.5 கோடி மதிப்பில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமத்திற்கு பொது வசதி மையம், திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் அரசு பங்களிப்பு ரூ.10 கோடியோடு ரூ.16 கோடி மதிப்பிலும், கரூர் மாவட்டம் க.பரமத்தியில் 5 கோடி அரசு பங்களிப்போடு மொத்தம் 6 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கயிறு குழு வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மின்னனு சாதனங்களின் பயன்பாட்டில் உலகம் முழுவதும் இன்றைக்கு முழ்கியிருக்கிறது. சிப் என்னும் அழைக்கப்படும் செமி கண்டக்டர் இல்லாத மைக்ரோ எலக்ட்ரானிக் சாதனம் இல்லை என்று சொல்லலாம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனை சார்ந்தவைகளின் அடிப்படையில் உலகளவில் அனைத்து செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் செமி கண்டக்டரின் தேவை முன்பை விட அதிகரித்துள்ளது.
உலகளவில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் சிப் தேவைக்கு சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளை அங்கீரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி தமிழ்நாட்டில் சீப் உற்பத்திக்கான முயற்சிகளை மேற்கொண்டு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் உங்களது பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும்.
கோவையை முனையமாக வைத்து செயல்படுத்தப்படும் வான்வெளி பாதுகாப்பு பெருவழி திட்டத்தில் வான்வெளி, பாதுகாப்பு தொடர்பான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும்.
நூல் விலை உயர்வு மேற்கு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் வேலையை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர் என்பது உங்களுக்கு தெரியும். கச்சா பொருட்களின் விலை உயர்வால் பலர் தொழிலை நடத்த முடியாமல் உள்ளனர்.
இதன் தீவிரத்தை உணர்ந்த நான் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இந்த பிரச்சினையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் பன்முனை பொருளதாரமாக மாற வேண்டும் என்பது எனது இலக்கு. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை அனைவரும் பயன்படுத்துங்கள். போட்டிகளில் நிறைந்த காலத்தில் திறனை மேம்படுத்தி கொள்ளுங்கள்.
உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவை மூன்றும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இவை மேம்பட்டால் ஒரு மாநிலத்திற்கு ஒட்டுமொத்தமான வளர்ச்சி தானாக வந்து சேரும். இவை மூன்றையும் வலுப்படுத்துவற்கான வழிகளை இதுபோன்ற சந்திப்புகளின் மூலமாகத் தான் பெற முடியும். இதுதான் இந்த சந்திப்புக்கான உண்மையான நோக்கம். இந்த சந்திப்பானது உங்களது தொழிலை மட்டுமல்ல. இந்த மாநிலத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்துவதாக அமைய வேண்டும். உலக தரத்தில் போட்டியிட நம்மை தகுதி படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு நாம் தேவையான மாற்றங்களை உள்வாங்க வேண்டும்.
அத்தகைய மாற்றங்களை பற்றி சிந்திக்க தான் இந்த சந்திப்பை நமது தொழில்துறை ஏற்பாடு செய்துள்ளது.