‘You respected my fight’: AG Perarivalan’s mother’s 31-year wait is over: “எனது மகனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் இறுதியாக உத்தரவிட்டுள்ளது. எனவே அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இங்கு நிற்கிறேன். கடந்த 31 ஆண்டுகளாக எங்களின் போராட்டம் உங்கள் அனைவருக்கும் தெரியும். அவரைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் அனைவரும் எனது போராட்டத்தை மதித்தீர்கள்.”
கேமராக்கள் சூழப்பட்ட நிலையில், களைத்துப்போயிருந்த 75 வயதான அற்புதம்மாள், தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் தனது மகனின் கைகளை இறுகப் பிடித்தப்படி கூறிய வார்த்தைகள் இவை. ராஜீவ் காந்தி கொலைவழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான தனது மகன் பேரறிவாளனுக்காக அற்புதம்மாள் நடத்திய நீண்ட மற்றும் கடுமையான போராட்டம் இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது.
பேரறிவாளன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “என் வாழ்க்கை மற்றும் நீதிக்கான நீண்ட போராட்டத்தின் போது நான் ஒட்டிக்கொண்ட ஒரே பிடி என் அம்மா மட்டுமே,” என்று கூறினார். மேலும், “என்னுடன் தோளோடு தோள் நின்று வலிமைமிக்க அமைப்பிற்கு எதிராக அவநம்பிக்கையான போரில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும்” பேரறிவாளன் நன்றி தெரிவித்தார்.
“நான் தெரிவிக்க விரும்பும் நன்றியை வெளிப்படுத்த எந்த மொழியிலும் எனக்கு ஒரு வார்த்தை கிடைக்கவில்லை. எந்தப் பின்புலமும் இல்லாத மிகச் சாதாரண மனிதனுக்காக நிற்பதற்கு அபாரமான நீதி உணர்வு வேண்டும். அவர்கள் சந்திக்காத ஒரு நபருக்காக நேரத்தையும் சக்தியையும் செலவிடுவது அவர்களின் அன்பையும் அக்கறையையும் காட்டுகிறது, ”என்று பேரறிவாளன் கூறினார்.
“போராட்டத்தின் பல்வேறு கட்டங்களில் இணைந்த ஒவ்வொரு நபரையும் சந்தித்து, அவர்களது கைகளைப் பிடித்து நன்றி செலுத்த விரும்புகிறேன். அவர்களின் உதவியை என்னால் ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. இருந்தபோதிலும், மகிழ்ச்சி, அன்பு மற்றும் பயபக்தியுடன் கூடிய கண்ணீருடன் நான் இப்போதைக்கு வெளிப்படுத்தக்கூடிய ஒரே வார்த்தை ‘நன்றி’.” என்று பேரறிவாளன் கூறினார்.
ஜனவரி 28, 1998 அன்று, நீண்ட விசாரணைக்குப் பிறகு, பேரறிவாளன் உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மே 11, 1999 அன்று பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஆகஸ்ட் 2011 இல், சென்னை உயர் நீதிமன்றம் மரணதண்டனை உத்தரவுக்கு தடை விதித்தது. அதே நேரத்தில், அற்புதம்மாள் மரண தண்டனைக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை உருவாக்கத் தொடங்கினார், “மரண தண்டனையை ஒழிப்போம்” என்ற வாசங்கள் அடங்கிய பேட்ஜை தனது சேலையில் பொருத்திக் கொண்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளுக்குச் சென்றார்.
பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்த அறபுதம்மாள், தன்னால் முடிந்த போதெல்லாம் சிறையில் தன் மகனைச் சந்தித்தார். “ஆனால் எங்கள் சந்திப்புகளின் போது, பேரறிவாளன் எனக்கு தைரியம் கொடுத்தார், வேறு வழியில்லை,” என்று அற்புதம்மாள் கூறினார்.
அற்புதம்மாளின் 86 வயதான கணவர், தமிழ்க் கவிஞரும், ஓய்வு பெற்ற கல்வியாளருமான ஞானசேகரன் என்ற குயில் தாசன், தனது இரு மகள்களில் ஒருவருடன் தங்கியிருந்தபோது, அற்புதம்மாள் சென்னைக்கும் ஜோலார்பேட்டைக்கும் இடையே, பேரறிவாளன் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மற்றும் புழல் மத்திய சிறைகளுக்கு இடையே, அலைந்துக் கொண்டிருந்தார்.
“அவர் எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தவர். நாங்கள் ஒன்றாகப் பாடுவோம், ”என்று பேரறிவாளன் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முந்தைய நாட்களை அற்புதம்மாள் நினைவு கூர்ந்தார்.
2017 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு முதன்முதலில் பரோல் வழங்கப்பட்டபோது, திரைத்துறைச் சேர்ந்தவர்கள் உட்பட, அற்புதம்மாளின் “இளம் நண்பர்கள்”, தாயும் மகனும் ஒன்றாகப் பாடுவதற்காக கீபோர்டைக் கொண்டு வந்தனர். பேரறிவாளன் பாடிய முதல் பாடல் “பொன்னு போல ஆத்தா”, பாடலின் அர்த்தம் “தங்கம் போன்ற தூய்மையான தாய்” “பதிலுக்கு துக்கம் மட்டுமே” பெறுகிறார் என்பதாகும்.
அற்புதம்மாளின் கூற்றுப்படி, கடந்த மூன்று தசாப்தங்களாக அவரது வாழ்க்கையில் மிகவும் அதிர்ச்சிகரமான இரண்டு நாட்கள் என்பது, 2011 இல் பேரறிவாளனின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது மற்றும் நாடாளுமன்றத் தாக்குதலுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது.
கருணை மனு நிராகரிப்பட்டதை அடுத்து பேரறிவாளனை சந்திப்பது “கடைசி முறை” என்று நினைத்து வேலூர் சிறையில் பேரறிவாளனைச் சந்திக்கச் சென்றபோது, அப்சல் குருவின் மனைவிக்கு தூக்குத் தண்டனை தொடர்பாக ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்பிய கடிதம் அற்புதம்மாளை பயமுறுத்தியது. “காலையில் செய்திகளைப் பார்ப்பதற்கும் அல்லது தெருவில் தபால்காரரைப் பார்ப்பதற்கும் நான் பயப்பட்டேன்,” என 2013ல் அற்புதம்மாள் கூறினார்.
இதையும் படியுங்கள்: கட்டித் தழுவி வரவேற்ற ஸ்டாலின்: பேரறிவாளன் விடுதலை ஹைலைட்ஸ்
புத்தக மூட்டையைச் சுமந்துகொண்டு சிறைக்குச் செல்வது, தன் மகனைப் பார்க்கச் சென்றதில் அற்புதம்மாளுக்கு ஒரு சிறப்பம்சமாக இருந்தது.
“சர்வதேச வரலாறு, கவிதைகள், நாவல்கள் என அனைத்தையும் படிப்பார். நாங்கள் அவருக்கு வாழ்க்கையில் எந்த ஆடம்பரத்தையும் கொடுத்ததில்லை. பெரியாரின் சித்தாந்தத்தைப் பின்பற்றி, எளிமையான வாழ்க்கை வாழ்ந்தோம். பள்ளி நாட்கள் முழுவதும், அவர் சிறந்த மாணவராக இருந்தார் மற்றும் உயர்நிலைத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றார். அனைவருக்கும் அவரை பிடித்திருந்தது. ஓய்வு பெற்ற சிறை அதிகாரிகள் கூட அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். நான் இறப்பதற்கு முன்பு அவருடன் வாழ முடியும் என்று நம்புகிறேன், ”என்று அற்புதம்மாள் முன்பு தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறியிருந்தார்.
புதன்கிழமையன்று, “பேரறிவாளனுக்கு அரசாங்கத்திடம் இருந்து பரோல் கிடைத்தது மற்றும் உச்ச நீதிமன்றம் அவருக்கு (மார்ச் மாதம்) ஜாமீன் வழங்கியது” அதன் பின்னர் தனது வாழ்க்கை உயரத் தொடங்கியதாக அற்புதம்மாள் கூறினார். மேலும், “இறுதியாக என்னால் அவரது உடல்நிலையை கவனித்துக்கொள்ள முடியும்,” என்றும் அற்புதம்மாள் கூறினார்.