ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் பெண்களுக்கென பிரத்தியேக நூலகமொன்று திறக்கப்பட்டுள்ளது.
ஏறாவூரில்தான் பெண்களுக்கென இலங்கையிலேயே தனியான பொதுச் சந்தையும் உள்ளது. அதேபோல் பெண்களுக்கென தனியான உடற்பயிற்சி வசதிகளும் ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாத்திமா மகளிர் நூலகம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வாசிகசாலைத் திறப்பு விழா ,செவ்வாய்க்கிழமை மாலை ஏறாவூர் வாவிக்கரையோரத்தில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் நகர சபைத் தவிசாளர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூரின் பெண் ஆளுமைகளான பிரதேச செயலாளர் நிஹாறா, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா, பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் சிஹானா, தென்னைப் பயிர்ச் செய்கை ஆய்வு கூடப் பொறுப்பாளர் ஜாஹிறா , நகர சபை உறுப்பினர் சுலைஹா உட்பட ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், நகர சபை பிரதித் தவிசாளர் ஏ.எஸ்.எம். றியாழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.