ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு?| Dinamalar

வாஷிங்டன்: ரஷ்யாவின், ‘எஸ் – 400’ ரக ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை, அடுத்த மாதம் முதல், தன் எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகன்’ தெரிவித்துள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்களால், பல ஆண்டுகளாக நம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இதேபோல், மற்றொரு அண்டை நாடான சீனாவால், 2020 முதல், லடாக் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.இவற்றை எதிர்கொள்ளும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ராணுவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பெர்ரியர் நேற்று கூறியதாவது:இந்தியாவுக்கு, அதன் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவால் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. எனினும், அதன் எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட, இந்திய ராணுவத்தினர் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். இதற்காக, ரஷ்யாவிடம் இருந்து, கடந்த டிசம்பர் முதல், எஸ் – 400 ரக, ஏவுகணை தகர்ப்பு அமைப்புகளை, இந்தியா பெற்று வருகிறது. அவற்றை, அடுத்த மாதம் முதல், எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.இதற்கிடையே, இந்தியாவில் அதிநவீன ஏவுகணைகளை தயாரித்து, அவற்றை வெற்றிகரமாக பரிசோதித்தும் வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.