கண்டதும் காதல் சொன்னேன் – இப்படிக்கு முரளி
உரையாடலை ஆரம்பிக்கும்போதே ‘சொல்லுங்க பாஸ்’ என்றுதான் ஆரம்பிக்கிறார் முரளி. தலைமுடியை ஒட்ட வெட்டி மீசையை முறுக்கிக்கொண்டு மிலிட்டரி ஆபீஸர் போலிருக்கிறார். “வின்சென்ட் செல்வா டைரக்ட் பண்ணும் ‘இரணியன்’ படத்துக்கான கெட்டப் இது. இந்த மாதிரி ரோல்கள்தான் எனக்குப் பிடிச்சுருக்கு.”
புதிய தீர்மானம்: “இனிமே கடைசி ரீலில் காதலைச் சொல்றது அல்லது அப்போகூடச் சொல்லாம மனசுக்குள்ளேயே பூட்டி வெச்சுக்கிட்டு நெஞ்சு வெடிச்சு சாகறதுங்கற மாதிரி காரெக்டர்களுக்கு முக்கியத்துவம் தர்றதில்லைனு தீர்மானம் பண்ணியிருக்கேன்.
எத்தனை நாளைக்குத்தான் காதலைக் கையில் வெச்சுக்கிட்டே தவிப்பது? இத்தனைக்கும் என் ஒரிஜினல் காரெக்டர் அது கிடையாது. ஒரு பொண்ணைப் பார்த்த முதல் மணி நேரத்திலேயே ஐ லவ் யூ சொன்னவன் நான்…” என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மனைவி ஷோபாவைப் பார்க்க, அவருக்கோ வெட்கம் தாங்கவில்லை.
சட்டென்று ஷாட் கட் பண்ணி 1980 செப்டம்பர் பதினேழாம் தேதிக்குப் போய்விட்டார் முரளி. “ஒரு அழகான பார்க்… அதன் வாசலிலே நானும் என் நண்பனும் அவன் காதலிக்காக காத்திருந்தோம். அவள் தன் தோழியோடு வந்தாள். சின்னதாக அறிமுகம் முடிந்த பிறகு என் நண்பனும் அவன் காதலியும் பார்க்கினுள் போய்விட, நானும் அந்தத் தோழியும் தனியாக நின்றுகொண்டிருந்தோம். எவ்வளவு நேரம் ஒரே இடத்தில் நிற்பது…. ‘ஒரு வாக் போகலாமா?’ என்று நான் கேட்க, அந்தத் தோழிப் பெண்ணும் சரி என்றாள். மஞ்சளும் ஆரஞ்சுமாகப் பூக்கள் சிதறிக்கிடந்த சாலையோரமாக நடக்கத் தொடங்கினோம். ஒரு மணி நேரம்… அதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சட்டென்று அந்தப் பெண்ணின் கைகளைப் பிடித்து ‘ஷோபா. ஐ லவ் யூனு சொல்லிட்டேன். இப்படித் தடாலடி பார்ட்டி நான்…. என்னைப் போய் ‘கடைசி ரீல் வரைக்கும் காதலைச் சொல்லாம இரு’னு சொன்னா எவ்வளவு வேதனையா இருக்கும்….?’ என்று நிகழ்காலத்துக்கு வந்தார் முரளி பேசிக்கொண்டிருந்த நேரத்தில் கையிடுக்குகளில் சிகரெட் புகைந்து கொண்டே பகுதி இருந்தது.
கெட்ட பழக்கம்“சிகரெட் பழக்கத்தை விட்டுடலாம்னு இருக்கேன் பாஸ். கெட்ட பழக்கம்னு நல்லா தெரியுது. குடிகாரனா இருந்து இப்போ குடிக்கும் பழக்கத்தை சுத்தமா விட்டுட்டேனே. அதுபோல இதையும் விடமுடியாதா என்ன….?” நட்டநடு ஹாலில் தரையில் சம்மணமிட்டுக்கொண்டு, குண்டு தலையணையை மடியில் வைத்துக் கொண்டு கண்ணை உருட்டி உருட்டிப் பேசும் முரளிக்கு மூன்று குழந்தைகள் என்றால் நம்ப முடியவில்லை.
குழந்தைகள்: “கடைசி பையனை மட்டும் வெச்சுக்கிட்டு முதல் இரண்டையும் மறைச்சு வெச்சுட்டா இளைஞனா தெரிவேன் இல்லையா? ஆனா உயிரை மூணு பங்கு வைக்க முடியாதே. நானே விட்டாலும் பசங்க விடமாட்டாங்க”
முரளி பேசிக்கொண்டிருக்கும்போதே ஸ்கூல் முடிந்து வந்து டியூஷன் போவதற்காகப் புறப்பட்டுக்கொண்டிருந்த குழந்தைகள் ‘ஹே….’ என்று ஓடிவந்தன. இடது பக்கம் ஒன்றும் வலது பக்கம் ஒன்றும் தொற்றிக் கொள்ள, மூன்றாவது பையன் முதுகுப் பக்கமாக தலைக்கு மேல் ஏறினான். குழந்தைகள் ஆளுக்கு ஒரு பக்கமாக முரளியின் கன்னத்தை திருகிவிட்டு ஒடிப்போக, ரிலாக்ஸாக கால்களை நீட்டிக்கொண்டார் முரளி.
ஹாலே வீடு: “இந்த வீட்டிலேயே எனக்குப் பிடிச்ச இடம் இதுதான் பாஸ். ராத்திரி எத்தனை மணிக்கு வந்தாலும் இங்கே தரையில் உட்கார்ந்து சாப்பிட்டபடி டி.வி. பார்த்துட்டிருப்பேன். டைனிங்ஹால் , பெட்ரூமெல்லாம் எனக்கு வேஸ்ட்.
இங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு தலையணையை இழுத்துப் போட்டுப்படுத்தா பத்தாவது நிமிஷம் குழந்தைங்க ஆளுக்கொரு தலையணையோடு வந்து சுத்திப்படுத்துக்கும். எனக்கென்னமோ அப்படி தூங்கறது தான் சந்தோஷம்!” என்று சொல்லும் முரளி, வளசரவாக்கத்தில் புது வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்.
இன்று மார்க்கெட்டில் செங்கல் என்ன விலை, சுவிட்ச் போர்டில் லேட்டஸ்டாக என்ன மாடல் வந்திருக்கிறது, வாட்டர் டாங்க் கட்டுவதற்கு மணல், சிமெண்ட் என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் என்ற விஷயங்களெல்லாம் அத்துபடியாக தெரிந்து வைத்திருக்கிறார்.
வாழ்க்கைக் கனவு:“அந்த வீடு என் வாழ்க்கையின் கனவு பாஸ். பதினெட்டு வருஷ கனவு. இப்போதான் நிஜமாகியிருக்கிறது. அந்த வீட்டில் கொத்தனாருக்கு உதவி செய்யும் வேலை தொடங்கி அலங்காரம் வரைக்கும் என் வியர்வையும் கலந்திருக்கிறது. என் சந்தோஷம் அந்த வீடுதான்.
அந்த வீடு கட்டும்போதுதான் சினிமா தவிர வெளியில் எத்தனை விதமான தொழில்கள் இருக்கிறது என்று தெரிந்தது” என்று சொல்லும் முரளி, சினிமா உலகினுள் நுழைந்தது உதவி இயக்குநராகத்தான். ஆனால், அந்த ஏரியாவையே மொத்தமாக ஓரங்கட்டி விட்டு நடிக்க ஆரம்பித்து விட்டார்.
“நிச்சயம் டைரக்ட் பண்ணனும் பாஸ்….. நடிகனாக திசைமாறிட்டாலும் டைரக்டர் முரளி எனக்குள்ளேதான் இருக்கிறார். என்ன சிக்கல்னா ஒரு படம் டைரக்ட் பண்ணிட்டு அடுத்து மற்றவங்க டைரக்ஷனில் நடிக்கும்போது நடுவில் ‘டைரக்டர் முரளி’ மூக்கை நுழைச்சு கருத்து சொல்வாரோன்னு பயமாக இருக்கு. ஆனால், நேரம் கனியும்போது டைரக்டராகிடுவேன்” என்றார்.
வித்தியாசமான ரசிகர்:முரளிக்கு வித்தியாசமான ரசிகர் ஒருவர் இருக்கிறார். ‘நாளை முதல்…’ என்று ஒட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டரானாலும் ‘காமராஜர் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு என்று செய்தி சொல்லும் அரசியல் போஸ்டரானாலும் ஓரத்தில் கரியால் ‘கடவுள் முரளி வாழ்க’ என்று எழுதியிருப்பாராம் அந்த ரசிகர். “பெருமாள் என்பது அவர் பேரு. மதுரைக்காரர். சென்னைக்கு என்னைப் பார்க்க வரணும்னா மதுரையில் லாரியில் லிஃப்ட் கேட்டு ஏறிக்குவார். கைநிறைய கரித்துண்டுகளோடு! வழியில் இஷ்டப்பட்ட இடத்தில் இறங்கிக் கொண்டு சுவர்களில் எல்லாம் ‘கடவுள் முரளி’னு எழுதித் தள்ளிக்கொண்டிருப்பார். அடுத்து ஒரு லாரி பிடிச்சு அடுத்த ஊருக்கு. ரொம்ப நாளா தேடிக் கடைசியில் ஒரு நாள் அவரை விரட்டிப் பிடிச்சுட்டோம். இனிமே அந்த வேலை எல்லாம் செய்யக்கூடாது’னு சொன்னேன். ‘முயற்சி பண்றேன் சார்’னு சொல்லியிருக்கார். இப்பவும் ரோட்டில் எங்கேயாவது கரியால் எழுதியிருப்பதைப் பார்த்தால் அட…. பெருமாள் சென்னைக்கு வந்திருக்கார் போலிருக்கு’னு தெரிஞ்சுக்குவேன்” என்றார். நல்ல ரசிகர்!
சந்திப்பு: சி. முருகேஷ்பாபு
படங்கள் பொன். காசிராஜன்