பெங்களூரு: கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் இருந்து பெரியார், நாராயண குரு குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு மொழிப் பாடப் புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் கேசவ் பலிராம் ஹெக்டேவின் உரையை சேர்ப்பது தொடர்பாக எதிர்ப்புகளும் விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த சர்ச்சை நீங்குவதற்குள், 10-ஆம் வகுப்பு சமூக அறிவியல் புதிய பாடப் புத்தக்கத்தில் பெரியார், நாராயண குரு குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மாநில பாடநூல் கழகத்தின் இணையதளத்தில் புதிய சமூக அறிவியல் பாடநூலின் பிடிஎஃப் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பகுதி 5 சமூக, மத சீர்திருத்த இயக்கங்கள் என்ற தலைப்பில் பாடம் இடம்பெற்றிருக்கிறது.
அந்தப் பாடத்தில் பிரம்ம சமாஜ் நிறுவிய ராஜாராம் மோகன் ராஜ், ஆர்ய சமாஜம் நிறுவிய தயானந்த் சரஸ்வதி, பிரார்த்தன சமாஜ் நிறுவிய ஆத்மாராம் பாண்டுரங், சத்யசோதன சமாஜ் நிறுவிய ஜோதிபாய் பூலே, அலிகர் இயக்கத்தை நிறுவிய சர் சயீது அகமது கான், ராமகிருஷ்ண மிஷனை தோற்றுவித்த ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் பற்றி தகவல் உள்ளது. ஆனால் பெரியார், நாராயண குரு பற்றி முந்தைய பதிப்பில் இடம்பெற்றிருந்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.
பெரியார், நாராயண குரு சிறு குறிப்பு:
துறவு பூண்டு காசிக்கு சென்ற தந்தை பெரியார், காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார். ஆரம்பக் காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார். திராவிடர்கள் தலைநிமிர்ந்து சமத்துவத்தோடும், பகுத்தறிவோடும் வாழ வித்திட்டவராக அறியப்படுகிறார்.
கேரளத்தின் மறுமலர்ச்சித் தந்தை எனப் போற்றப்பட்டவரும் சிறந்த கல்வியாளருமாக அறியப்படுபவர் ஸ்ரீ நாராயண குரு. 23-வது வயதில் ஊரைவிட்டு வெளியேறி, தமிழ்நாட்டுக்கு வந்து துறவு பூண்டார். வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், அறுவகை மந்திரங்கள், பவுத்த, சமண மரபுகள், மூவகை வேதாந்தங்கள், இந்திய, வெளிநாட்டு தத்துவங்கள் ஆகியவற்றை கற்று நிபுணத்துவம் பெற்றார். இவரது சீர்திருத்த கொள்கைகளின் விளைவாக உருவானதுதான் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபை. மகாத்மா காந்தி இவரை ‘அவதார புருஷர்’ எனப் போற்றினார். பாரதியார் இவருடைய சமூக சீர்திருத்தக் கொள்கைகளையும், சமஸ்கிருத படைப்பு களையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
சமூக சீர்திருத்தத்தில் அளப்பரிய பங்காற்றிய இந்த இருவர் பற்றிய பாடங்களும் நீக்கப்பட்டது கர்நாடகாவில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.