கர்நாடகா: பாடப்புத்தகங்களில் பெரியார் உள்ளிட்ட சீர்திருத்தவாதிகளின் வாசகங்கள் நீக்கம்!

கர்நாடகாவில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து சீர்திருத்தவாதிகளான நாராயண குரு, பெரியார் பற்றிய வாசகங்கள் நீக்கப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்பு கன்னட முதல் மொழி பாடத்தில் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரின் உரை சேர்க்கப்பட்டதால் எழுந்த சர்ச்சை இன்னும் ஓயாத நிலையில், பத்தாம் வகுப்பு புதிய சமூக அறிவியல் பாடநூலில் இருந்து சீர்திருத்தவாதிகளான நாராயண குரு மற்றும் பெரியார் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
image
கர்நாடக பாடநூல் கழகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பிடிஎப் வடிவத்திலான அந்த புத்தகத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில், சமூக மற்றும் மத சீர்திருத்த இயக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. ராஜாராம் மோகன்ராய் நிறுவிய பிரம்ம சமாஜம், சுவாமி தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜம், ஆத்மாராம் பாண்டுரங்கின் பிரார்த்தனா சமாஜம், ஜோதிபா பூலேயின் சத்யசோதனை சமாஜம், சர் சைய் அகமது கானின் அலிகார் இயக்கம், ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் ராமகிருஷ்ண மிஷன், அன்னி பெசன்ட்டின் பிரம்ம ஞான சபை ஆகியவை குறித்த தகவல்கள் அப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.
image
நூலின் முந்தைய பதிப்பில் இருந்த சீர்திருத்தவாதிகளான நாராயண குரு மற்றும் பெரியார் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட பகுதிகளை கொண்ட புதிய பாடப்புத்தகம் மாணவர்களிடம் இன்னும் விநியோகிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.