ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் நீதிபதியை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பணியாளர்கள் தலைமை நீதிபதி மாறுதலாகி சென்றுவிட்டதாகவும், புதிய நீதிபதி இன்னும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
அப்போது திடீரென, `என்னுடைய காதலியை கடத்திவிட்டனர், அவரை தன்னுடன் சேர்த்துவைக்க யாருமே இல்லையா’ என்று நீதிமன்றத்திற்குள்ளேயே தனது இடது கையில் பல இடங்களில் பிளேடால் அறுத்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிமன்ற பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வாலிபரை தடுத்து நிறுத்தி கையில் ரத்தம் கொட்டிய நிலையில் துணியால் கட்டு போட்டனர். பின்னர் கேணிக்கரை போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர் மலைச்சாமி அந்த வாலிபரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
சிகிச்சைக்கு பின் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் அருகே பெருங்களூர் கிராமத்தை சேர்ந்த பிரசாத் என்பதும், வழிவிடு முருகன் கோயில் அருகே உள்ள பேக்கரியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசாரிடம் கேட்டபோது, “இவரும் ஆர்.எஸ். காவனூரை சேர்ந்த இளம் பெண்ணும் காதலித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பதில் பிரசாத் உறுதியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒருமாதமாக அவரின் காதலியின் செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருந்துள்ளது. இதனால் காதலியை பார்க்க அவரின் வீட்டு பிரசாத் சென்றபோது பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் முடித்து வெளியூர் அனுப்பிவைத்துவிட்டோம் இனி எங்கள் மகளை தொந்தரவு செய்யக்கூடாது என சத்தம்போட்டு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து முறையிடுவதற்காக நீதிமன்றத்திற்கு வந்த பிரசாத் நீதிபதி இல்லாததால் விரக்தியடைந்து பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். தன்னுடைய காதலியை அவரின் பெற்றோர் கடத்தி வைத்துள்ளதாகவும், அவரை தன்னுடன் சேர்த்துவைக்கும்படி புகார் அளித்துள்ளார். அதன்படி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.