சென்னை: சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை சிபிஐ அதிகாரிகள் நேற்று சென்னையில் கைது செய்தனர்.
2009-2014 காலகட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, 263 சீனர்களுக்கு தடையில்லா விசா வழங்கப்பட்டதாகவும், இதன்மூலம் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் கைமாறியதாகவும் கார்த்தி சிதம்பரம் மற்றும் ஆடிட்டர் பாஸ்கர ராமன் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்நிலையில், ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய, 10 இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் நேற்று முன்தினம் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்ததால், அவரிடம் சிபிஐ அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்த முடியவில்லை.
இந்நிலையில், அவரின் ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். எனினும், அவர் விசாரணைக்கு போதியளவு ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
தொடர்ந்து, சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி கோரினர். இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், பாஸ்கர ராமனை டெல்லிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, பாஸ்கர ராமனை மேல் விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் டெல்லிக்கு அழைத்து சென்றனர். அடுத்தகட்டமாக, கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் நேரடியாக விசாரணை நடத்த திட்டமிட்டு, அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.
விசா முறைகேடு வழக்கில் ஆடிட்டர் பாஸ்கர ராமன் முதல் குற்றவாளியாகவும், கார்த்தி சிதம்பரம் 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.