கியான்வாபி மசூதி சர்ச்சையில் கருத்து தெரிவித்துள்ள திரிணமூல் எம்.பி. வாட்ஸ் அப்பில் வலம் வந்த மீமை எடுத்து பாபா அணு உலையையும், சிவலிங்கத்தையும் ஒப்பிட்டு ட்வீட் செய்தது கடும் கண்டனங்களை பெற்றுள்ளது.
வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்காரக் கவுரி அம்மன் சிலை உள்ளது. அம்மனை தரிசிக்கும் வழக்கில், நீதிமன்றக் களஆய்வு நடைபெற்றது. இதில், தொழுகைக்கு முன் கை, கால்களை கழுவும் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் இருப்பதாக புகார் செய்யப்பட்டது. ஒசுகானாவை சீல் வைத்து தொழுகைக்கும் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்களின் வழக்கறிஞரான ஹரி சங்கர் ஜெயின் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகி வரும் சூழலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான மஹூவா மொய்த்ராவின் ட்வீட் ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
Hope Bhabha Atomic Research Centre is not next on the digging list…. pic.twitter.com/VZNxLPG8R3
— Mahua Moitra (@MahuaMoitra) May 18, 2022
பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் அணு உலையின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், அடுத்ததாக பாபா அணு உலை தோண்டப்படும் பட்டியலில் இருக்காது என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதேபோன்ற மீம் வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் பரவிவர அதை மஹூவா மொய்த்ரா எடுத்துக் கையாண்டது பரவலாக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மஹூவா மொய்த்ரா இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாக அவரை விமர்சித்து வருகின்றனர்.
Bhabha Atomic Research Centre will soon be declared by bhakts to be a massive Shiv Linga! pic.twitter.com/IRKSE0dEV7
— Jawhar Sircar (@jawharsircar) May 17, 2022
அதேவேளையில், சிலர் எல்லா அணு உலைகளுமே லிங்க வடிவில் தான் உள்ளன. ஏனென்றால் அந்த வடிவத்தால் அபரிதமான ஆற்றலைத் தாங்க முடியும் என்று மொய்த்ராவுக்கு பதில் கூறி வருகின்றனர். முன்னதாக மொய்த்ரா, இந்தியப் பொருளாதாரம் சீரழிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அரசாங்கமோ தோண்டிக் கொண்டிருக்கிறது என கிண்டல் ட்வீட் பதிவு செய்திருந்தார்.
மஹூவா மொய்த்ராவுக்கு முன்னதாகவே, திரிணமூல் ராஜ்யசபா எம்.பி. ஜவஹர் சிர்கார், ”பக்தாள்களால் விரைவில் பாபா அணுசக்தி ஆராய்ச்சிக் கழக கட்டிடத்தை பிரம்மாண்ட சிவலிங்கமாக அறிவிக்க வேண்டும் என்று கோருவார்கள்” என்று ட்வீட் செய்திருந்தார்.
சர்ச்சையில் சிக்கியுள்ள கட்டிடங்கள்: கியான்வாபி மசூதி மட்டுமல்ல இன்னும் நிறைய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.
டெல்லியில் குதுப்மினார் வளாகத்தில் 27 இந்து மற்றும் ஜெயின் கோயில்கள் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் குவ்வத்-உல்-இஸ்லாம் மசூதி கட்டப்பட்டதாகவும் இது தொடர்பாக தொல்லியல் துறை கூறியிருப்பதை ஆதாரமாகக் கொண்டும் டெல்லி சிவில் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. குதுப்மினார் வளாகத்தில் இடிக்கப்பட்ட 27 இந்து, ஜெயின் கோயில்களை மீண்டும் நிர்மானிக்க வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
டெல்லியை ஆண்ட முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் 1656-இல் கட்டப்பட்டது ஜாமா மசூதி. பழம்பெருமை வாய்ந்த இது, நாட்டின் பெரிய மசூதிகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. டெல்லியின் ஜாமா மசூதியின் அடியில் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாக இந்து மகா சபா புகார் கூறியுள்ளது. இவற்றை மீட்டெடுக்கும்படி வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு அச்சபையின் தலைவர் சுவாமி சக்ரபாணி கடிதம் எழுதியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்ட பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், தாஜ்மகால் வளாகத்தில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளைத் திறக்க உத்தரவிடக்கோரி கடந்த 4-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்து கடவுள்களின் சிலை இருக்க வாய்ப்பு உள்ளதால் அந்த அறைகளை திறந்து சோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இவ்வாறு மசூதிகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் சூழலில் மஹூவா மொய்த்ரா இந்த ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்.