குதுப் மினார் கட்டடம் கடந்த 1193-ம் ஆண்டில் டெல்லி சுல்தான் குத்புதீன் ஐபக் என்பவரால் கட்டப்பட்டது. இது 73 மீட்டர் உயரத்துடன், ஐந்து அடுக்குகளைக்கொண்ட இந்தியாவின் மிக உயரிய கோபுரம். செங்கற்களால் கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
ஆனால், இந்தியாவின் நினைவுச் சின்னங்களைச் சுற்றி சமீபகாலமாகத் தொடர்ந்து சர்ச்சைகள் உருவாக்கப்படுகின்றன. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னம் என அறிவிக்கப்பட்ட தாஜ்மஹாலைத் தொடர்ந்து தற்போது உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட குதுப் மினார் குறித்தும் சர்ச்சைகள் தொடர தொடங்கிவிட்டன. குதுப் மினார் கோபுரம் 27 கோயில்களை இடித்துவிட்டுக் கட்டப்பட்டதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு குற்றம்சாட்டியது.
அதைத் தொடர்ந்து, தற்போது, இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஏஎஸ்ஐ) முன்னாள் மாநில இயக்குநர் தரம்வீர் சர்மா, குதுப் மினார், ராஜா விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது. இது குதுப் அல்-தின் ஐபக் கட்டவில்லை என்றும் கூறியுள்ளார். “இது குதுப் மினார் அல்ல, சூரிய கோபுரம் (கண்காணிப்பு கோபுரம்). இது 5 ஆம் நூற்றாண்டில் ராஜா விக்ரமாதித்யாவால் கட்டப்பட்டது, குதுப் அல்-தின் ஐபக் என்பவரால் அல்ல. இது தொடர்பாக என்னிடம் நிறைய ஆதாரங்கள் உள்ளன.
குதுப்மினார் கோபுரம் 25 அங்குல சாய்வு நிலையில் உள்ளது. இது சூரியனைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டது. அதனால்தான், ஜூன் 21-ம் தேதி, சங்கராந்திக்கு இடைப்பட்ட காலத்தில், குறைந்த பட்சம் அரை மணி நேரம் அந்த பகுதியில் நிழல் படாமல் இருக்கும். இது அறிவியல் மற்றும் தொல்பொருள் உண்மை. இரவு வானில் துருவ நட்சத்திரத்தைப் பார்ப்பதற்காகத்தான் குதுப்மினார் கதவு கூட வடக்கு நோக்கி உள்ளது. எனவே, குதுப்மினார் என்று அழைக்கப்படுவது அதன் அருகில் உள்ள மசூதியுடன் தொடர்புடையது அல்ல” எனக் கூறியுள்ளார்.