நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கொட்டித் தீர்த்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது.
நேற்று அதிகாலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் இரவும் மழை நீடித்தது. இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த நிலையில் காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது கனமழை கொட்டித் தீர்த்தது.
கொட்டாரம், பூதப்பாண்டி, கன்னிமார், சுருளோடு, கொட்டாரம், கோழிப்போர்விளை, குளச்சல், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 69.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் கொட்டி வரும் கனமழையால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
ஏற்கனவே அணையின் நீர்மட்டம் 42 அடியை கடந்ததையடுத்து குழித்துறை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் 43.78 அடியை எட்டியது. அணைக்கு 1432 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நீர்மட்டம் 45 அடியை எட்டியதும் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும்.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் நாளைக்குள் 45 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2½ அடி உயர்ந்து உள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 46.05 அடியாக உள்ளது. அணைக்கு 1181 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சிற்றாறு1 நீர்மட்டம் 10.89 அடியாகவும், சிற்றார்2 அணை நீர்மட்டம் 10.99 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 18.86 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.90 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு: