பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய தகவல், ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் நாளை மறுநாள் டெல்லியில் இருந்து புறப்படுகிறார்.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேன்ஸ் திரைப்பட விழாவில், 22, 23, 24 ஆகிய மூன்று நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் முருகன் பங்கேற்க உள்ளார். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் திறந்து வைத்த இந்திய அரங்கை, இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பார்வையிடுகிறார்.
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டுப் படங்களை கூட்டாக தயாரிப்பதற்கு ரூ. 2 கோடி வரையிலும், வெளிநாட்டுப் படங்களை இந்தியாவில் படம்பிடிக்க ரூ.2.5 கோடி வரையிலும் மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்கிறது. இந்த அரிய வாய்ப்பை சர்வதேச திரைப்படத் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்களை மத்திய இணையமைச்சர் முருகன் சந்தித்து பேசவுள்ளார்.
இந்தியாவில் திரைப்படம் தயாரிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருவதை குறிப்பிட்டு, இந்தியாவில் படப்பிடிப்பு நடத்த வருமாறு அவர்களுக்கு அவர் அழைப்பு விடுப்பார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.