கேரளா, பெங்களூருக்கு சலுகை விலையில் கல்விச் சுற்றுலா! பள்ளிக்கல்வித்துறை வரவேற்பு

இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களை சலுகைக்கட்டணத்தில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் பணியில் இந்திய ரயில்வே ஈடுபட்டுள்ளது. அப்படி அழைத்துச் செல்கையில் கேரளா, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு சலுகைக்கட்டணத்தில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதால், உரிய முறையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலனடையுமாறு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப்பள்ளி மாணவர்களை கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ, ஆந்திரத்தில் உள்ள அகஸ்தியா அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் பணியில் கடந்த சில ஆண்டுகளாகவே தெற்கு ரயில்வே ஈடுபட்டுள்ளது. அதன்படி கடந்த 2016-17-ம் கல்வியாண்டில் 737 மாணவர்களை ரூ.13.40 லட்சம் செலவிலும், 2017-18-ம் ஆண்டில் 3,520 பேரை ரூ.64 லட்சம் செலவிலும், 2018-19-ம் ஆண்டில் 39,708 பேரை ரூ.1.23 கோடி செலவிலும், 2019-20-ம் ஆண்டில் 47,195 பேரை ரூ.1.92 கோடி செலவிலும் கல்விச் சுற்றுலா அழைத்துச்சென்றுள்ளது தெற்கு ரயில்வே.
image
தொடர்ந்து 2020-21, 2021-22-ம் கல்வியாண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்லாத நிலையில், வரும் கல்வியாண்டில் (2022-2023), அரசுப்பள்ளி மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல தயார் என்றும், உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு, IRCTC சுற்றுலா மேலாளர் சுப்பிரமணி கடிதம் எழுதியிருந்தார்.
image
இதையும் படிங்க… ‘டைம் டிராவல்’ கதையில் சிவனாக நடிக்கும் யோகிபாபு – காத்திருக்கும் மாஸ் சம்பவம்
IRCTC-இன் கடிதத்தின் பேரில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ள பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், வரும் கல்வியாண்டில் அரசுப்பள்ளி மாணவர்களை சலுகைக்கட்டணத்தில் கல்விச்சுற்றுலா அழைத்துச்செல்லுமாறும், அதற்காக ஏற்கனவே திட்டமிட்டிருப்பின் ரயில்வேத்துறையின் சலுகையை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும் உரிய அறிவுறுத்தல் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.