மோசடி வழக்கில் இருந்து சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கானுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆசம் கான். தனக்கு தோன்றிய கருத்துகளை வெளிப்படையாக கூறுபவர் என்பதால் இவருக்கு அரசியலில் எதிரிகள் அதிகம். இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக ஆசம் கானுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சில வழக்குகளில் அவர் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இதுவரை 89 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 88 வழக்குகளில் அவர் ஜாமீன் பெற்றுவிட்டார். ஆனால், அரசுப் பள்ளியில் நில மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மட்டும் அவரால் ஜாமீன் பெற முடியாமல் இருந்து வந்தது. அவரது ஜாமீன் மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரிக்காமலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த செயலை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் ஆசம் கான் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது, நீதிபதிகள் எல்.என். ராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ். போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
ஒருவரது ஜாமீன் மனுவை விசாரிப்பதில் இத்தனை தாமதம் ஏற்படுவது ஏன் என புரியவில்லை. நீதித்துறையின் கேலிக்கூத்தாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது. ஆசம் கானின் ஜாமீன் மனு மீது அலகாபாத் உயர் நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்காததால், அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை முடிவு செய்கிறது. அதன்படி, இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்து ஆசம் கானுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிடுகிறது என நீதிபதிகள் கூறினர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM