மும்பை:
மகாராஷ்டிரா நடிகை கேத்தகி சித்தலே. இவர் முன்னாள் மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை அளிக்கும் வகையில் கருத்தை பதிவிட்டார்.
“நீங்கள் பிராமணர்களை வெறுக்குறீர்கள். உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது” என்று சரத்பவாரை விமர்சிக்கும் விதமாக கேத்தகி சித்தலே சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார்.
சரத்பவாரின் பெயரை முழுமையாக நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், பவார் என்றும் 80 வயதானவர் என்றும் அந்த பதிவு குறிப்பிடுகிறது. சரத்பவார் 81 வயதானவர்.
இந்த சர்ச்சை பதிவை பகிர்ந்த நடிகைக்கு எதிராக தேசிய வாத காங்கிரசை சேர்ந்தவர்கள் தானே, புனே, துலே போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து இணையவழி குற்ற தடுப்புபிரிவு போலீசார் மகாராஷ்டிரா நடிகை கேத்தகி சித்தலேவுக்கு எதிராக 3 பிரிவுகளில் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நேற்று வரை தானே போலீசார் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதித்தது.
இதற்கிடையே சரத்பவாரை சர்ச்சை அளிக்கும் வகையில் விமர்சித்த நடிகை கேத்தகி சித்தலே மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மும்பையில் 2 வழக்குகளும், அகோலி மாவட்டத்தில் ஒரு வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்தநிலையில் நடிகை கேத்தகி சித்தலேயின் போலீஸ் காவல் நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து அவரை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரை ஜூன் 1-ந் தேதி வரை நீதிமன்ற காவலில்வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து நடிகை கேத்தகி சித்தலே ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கேட்டு தானே கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.