சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நடராஜரான சபாநாயகரை தரிசிக்க அனுமதி தந்துள்ளது தமிழ்நாடு அரசு.
முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதன்பிறகு பல்வேறு பிரச்னைகள் காரணமாக கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு, சிதம்பரம் தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்து தடைவிதித்தனர். இதனால் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனைவருக்கும் அனுமதிக்க வழங்கக்கோரி பல போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் கோயிலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பாக நீதிமன்ற வாதங்களும் நடைபெற்றது.
தொடர்புடைய செய்தி: சிதம்பரம் கனகசபை மண்டபத்திற்குள் அனுமதிக்க கோரிய போராட்டத்துக்கு தடைகேட்ட வழக்கில் உத்தரவு
இந்நிலையில் இன்று இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி `சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.என்.ராதா என்பவரால் தொடரப்பட்ட வழக்கில், ஏப்ரல் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் `பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கோவிட் 19 தற்போதைய நிலை மற்றும் கோயில் நிர்வாகத்தினர் ஆலோசித்து முடிவு செய்யவும்’ என உத்தரவிடப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடலூர் ஆட்சியரால் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. அதனடைப்படையில் கனகசபை மண்டபத்தின் மீதேறி சபாநாயகரை பக்தர்கள் தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM