டெல்லி: பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவது மற்றும் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. முதற்கட்டமாக செக்மோசடி புகார்கள் அதிகம் உள்ள டெல்லி, குஜராத், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செக் பவுன்ஸ் மற்றும் செக் மோசடி வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற்து. இதை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மோசடிகள் தொடர்ந்து வருகின்றனர். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், செக் பவுன்ஸ் வழக்குகளை விரைந்து முடிக்க ஐந்து மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் வழக்குகள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதால், அங்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், நீதிபதி பி.ஆர்.கவாய்இ நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு அறிவித்துள்ளது.
இந்த வருடம் செப்டம்பர் 1ந்தேதிக்கு பிறகு நீதிமன்றங்கள் அமைக்கும் பணி தொடங்கும் எனவும் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை 5 மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரலுக்குத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் அதன் பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு இணங்க அவர் ஜூலை 21, 2022க்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னோடித் திட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி வரையிலான தகவலின்படி நாடு முழுவதும் 2.31 கோடிசெக்பவுன்ஸ், செக் மோசடி தொடர்பாக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதில், 35.16 லட்சம் வழக்குகள் செக் பவுன்ஸ் வழக்குகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.