புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை வழங்கலாம், ஆனால் மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது, மத்திய, மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரிஜிஎஸ்டி வரி தற்போது அமலில் உள்ளது. ஜிஎஸ்டி என அழைக்கப்படும் இந்த வரி வருவாயை மாநில அரசுகளும், மத்திய அரசும் பகிர்ந்து கொள்கின்றன.
ஜிஎஸ்டி வரி விதிப்பு, அதில் மாற்றங்கள், நிலுவை தொகை போன்ற பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலே பொருட்களுக்கான வரியை கூட்டுவது, குறைப்பது, நீக்குவது உள்ளிட்ட முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த கவுன்சிலில் மத்திய நிதியயைமைச்சர். பல மாநிலங்களில் நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அவர்கள் கூறியதாவது:
இந்தியாவில் ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு மதிப்பு மட்டுமே உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் அறிவுரைகளை மற்றும் பரிந்துரைகளை வழங்கலாம். ஆனால் இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை அவர்கள் நிர்ப்பந்திக்க முடியாது.
ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பை பாதிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.