ஜிஎஸ்டி குறித்து தனது கோரிக்கையையொட்டியே உச்சநீதிமன்றம் தீர்ப்பு! அமைச்சர் பி.டி.ஆர். தகவல்…

சென்னை: மத்திய அரசிடம்  நான் ஓராண்டுக்கு முன்பேவைத்த கோரிக்கையை ஒட்டியே உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  ஜி.எஸ்.டி வரி விதிப்பில் முழு மாற்றங்கள் தேவை என வலியுறுத்தி உள்ளார்.

உச்சநீதிமன்றம் இன்று ஜிஎஸ்டி தொடர்பாக வழங்கிய தீர்ப்பில்,  மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உள்ளது என்று கோடிட்டு காட்டியுள்ளது. இதையடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ’பொதுவுடைமைக் கொள்கையை உறுதியாக கடைபிடிக்கும் சீனாவில் தொடங்கி முதலாளித்துவ கொள்கையை வலியுறுத்தும் அமெரிக்கா வரை பெரும்பாலான நாடுகளில் மாநில, மாவட்ட அளவுகளில் ஏன் நகர அல்லது மாநகர அளவுகளில் நிதி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா அவ்விஷயத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது.

வரலாற்றுக் காரணங்களால் வரி விதிப்புக்கான அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் குவிய, மறைமுக வரி விதிப்பு அதிகாரங்களை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து அளித்தது நம் அரசியலமைப்புச் சட்டம். சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நமது அரசியலமைப்புச் சட்டம் ஒரு காலத்திலும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு அதிகாரக் குவிப்புக்கு சென்றுவிட்டது. அவசரகதியில் செயல்படுத்தப்பட்ட காரணத்தால் சரக்கு மற்றும் சேவை வரி வடிவமைப்பில் அடிப்படை குறைப்பாடுகள் உள்ளன. சட்டம் அமல்படுத்தப்பட்ட போது இந்த குறைபாடுகள் மேலும் வலுவடைந்து பெருமளவில் வெளிப்படத் தொடங்கியது.

இந்தப் பிரச்னைகளில் முக்கியமானது, ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான உறவின் நம்பிக்கையில் சீர்குலைவு ஏற்படுவதுதான். ஒன்றிய அரசு விதித்து, வசூலிக்கும் வரியில் மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய பங்கு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த சீர்குலைவுக்கு மிகப்பெரிய அளவில் உறுதுணை புரிகிறது.

சர்வ வல்லமை படைத்த, அனைத்து தளங்களையும் கூர்நோக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் எதிர்நோக்காத ஒன்று ஜி.எஸ்.டி மன்றம். இம்மன்றத்திற்கு அதன் முக்கிய பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைப்பு ரீதியாகவும், தொழில்நுட்ப தள அடிப்படையிலும் போதுமான வசதிகள் இல்லை. இந்த மன்றம் வெறுமென ஓர் அடையாள சடங்காக முத்திரை குத்த மட்டுமே செயல்படும்போது தான் இந்த விந்தை அபாயகரமாக மாறுகிறது என்று தெரிவித்து உள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பில் மத்திய மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்! உச்சநீதிமன்றம் கருத்து

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.