சங்கராபுரம் அருகே ஜேசிபி ஆப்ரேட்டரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பிரேதத்தை சாலையில் வைத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தீபன். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் அறிவழகனிடம் ஜேசிபி ஆபரேட்டராக பணி செய்து வந்தார். இந்நிலையில், இவர், வேலைக்கு செல்லாததாலும், அவரிடம் வாங்கிய முன்பணத்தை செலுத்தாததாலும் அறிவழகனின் உறவினர்கள் தீபனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படுகாயமடைந்த தீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தீபனின் உறவினர்கள் சடலத்துடன் சங்கராபுரம் மும்முனை சந்திப்பு பகுதியில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி – திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோயிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM