Chennai High court stalls installation of Karunanidhi statue at Thiruvannamalai: திருவண்ணாமலை கிரிவலப் பாதையை ஒட்டிய பொது இடத்தை ஆக்கிரமித்ததாக தொடரப்பட்ட மனுவை அடுத்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
“எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகள் தீவிரமானவை மற்றும் கிரிவலம் பாதையைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும்” என்று கூறி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் நீதிபதி ஜே.சத்தியநாராயண பிரசாத் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் புதன்கிழமையன்று சிலை நிறுவ தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மனுதாரர் ஜி கார்த்திக் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஆக்கிரமிப்பு நிலத்தில் தற்போதைய அமைச்சர் எ.வ.வேலு சிலை நிறுவ பீடம் கட்டியுள்ளார், என்று கூறினார்.
மனுவை எதிர்த்த கூடுதல் அட்வகேட் ஜெனரல், இவ்விவகாரத்தில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்றும், மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லாத இதுபோன்ற பிரச்னைகள் தொடர்பாக மனு தாக்கல் செய்ய இடமில்லை என்பதால், ரிட் மனுவையே தாக்கல் முடியாது என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்: ’எனது போராட்டத்தை மதித்தீர்கள்’; முடிவுக்கு வந்தது பேரறிவாளன் தாயாரின் 31 வருட காத்திருப்பு
இதைப் பதிவு செய்த நீதிமன்றம், “குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகளை கருத்தில் கொண்டு, இந்த ஆக்கிரமிப்பு குறித்து மனுதாரர் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார், திருவண்ணாமலையில் கிரிவலம் வர லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பாதையில் செய்யப்படும் ஆக்கிரமிப்பு பொதுமக்களுக்கு பெரும் இடையூறு விளைவிக்கும்,” என்று கூறியது
மேலும், அந்த இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள அனுமதித்தால், மழைக்காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படும், மேலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது, என்றும் நீதிமன்றம் கூறியது.
“எனவே, மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி, இன்றைய நிலவரப்படி உண்மைகளைக் கண்டறிந்து, அந்த பகுதியில் ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா இல்லையா என்பது குறித்து மே 19 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்படுகிறது. அதுவரை, தற்போதைய நிலை தொடரும்,” என, நீதிமன்றம் உத்தரவிட்டது.