சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து 3 ஆயிரம் பக்க விசாரணை அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விசாரணை ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று வழங்கினார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, அந்த ஆலையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தின் 100-வது நாளான மே 22-ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை 2018-ம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி, அப்போது முதல்வராக இருந்த கே.பழனிசாமி தலைமையிலான அரசு அமைத்தது.
கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிவுற்ற நிலையில், விசாரணை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்வைப் பொருத்தவரை விசாரணை வெளிப்படையாகவும், அதேநேரம் ரகசியத் தன்மையுடனும் நடத்தப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஏராளமானோர் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்தனர். இந்நிகழ்வு தொடர்பாக மொத்தம் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட 5 பாகங்கள் அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.
அதில் துப்பாக்கிச்சூடு நிகழ்வு, இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆணையத்தின் பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 1,500 வீடியோ ஆவணங்கள், 1,250 சாட்சிகள், 1,500 காவல்துறையினரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன. துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் பேரணிகளில் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிக்கையில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது.
இந்நிகழ்வு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரிடம் விளக்கம் கேட்டபோது, இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துகளை தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அருணா ஜெகதீசன் கூறினார்.