சேலத்தில் நகைச் சீட்டு, நகை முதலீடு மோசடி வழக்கில் தொடர்புடைய நகைக் கடையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் சின்னக்கடை வீதி ராஜகணபதி கோயில் அருகே தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோருக்குச் சொந்தமான லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் இயங்கி வந்தது. தங்களது கடையில் நகைச் சீட்டு மற்றும் தங்கத்தை முதலீடு செய்தல் மற்றும் நகையையும், பணத்தையும் டெபாசிட் செய்தால் ஒரு பவுன் தங்கத்திற்கு மாதம் 600 ரூபாய் வட்டி வீதமும், ஒரு லட்சம் பணத்திற்கு மாதம் 2500 ரூபாய் வீதம் வட்டி வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினர்.
இதனை நம்பி சேலம் ஆத்தூர் வாழப்பாடி ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் இதில் முதலீடு செய்தனர். இதில், சுமார் 400க்கும் மேற்பட்டோரிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை வாங்கியுள்ளனர். சில மாதங்களாக அனைவருக்கும் உரிய வட்டி தொகையை கொடுத்து வந்த நகைக்கடை நிர்வாகம், திடீரென கடந்த 3 மாதங்களாக உரிய தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த ஜனவரி 26 ஆம் தேதி நள்ளிரவு நகைக் கடையில் இருந்த அனைத்து ஆபரணங்களையும் காரில் ஏற்றிக்கொண்டு கடையை காலி செய்து விட்டு அதன் உரிமையாளர்கள் தப்பிச் சென்றனர். இவர் காரில் தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தங்கராஜ் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்கள் சிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜ்குமார் தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் நகைக் கடையை திறந்து உள்ளே என்னென்ன பொருட்கள் உள்ளன என சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒருசில ஆவணங்களை கைப்பற்றினர். ஆனால் நகை ஏதும் சிக்கவில்லை.
இதையடுத்து கடையில் இருந்த நகை பை மற்றும் காலண்டர் ஆகிய பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM