முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் புலனாய்வாளர்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவேந்தல் இன்று அனுஷ்ட்டிக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து இன்று காலை 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்களை ஏற்றுவதற்காக காலை 9 மணியளவில் பரந்தன் சந்தியில் பேருந்து நிறுத்தப்பட்டபோது நபர் ஒருவர் திடீரென பேருந்தில் ஏறி கண்காணித்துவிட்டு இறங்கியதுடன், அருகிலிருந்த கடையொன்றிற்குள் சென்றுள்ளார்.
இதன்போது சந்தேகமடைந்த மாணவர்கள் அந்த கடைக்குள் சென்று நீங்கள் யார் எதற்காக பேருந்தில் ஏறி விட்டு இறங்கினீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குறித்த நபர், தன்னை புலனாய்வு பிரிவை சேர்ந்தவரென அடையாளப்படுத்தியதுடன், முள்ளிவாய்க்கால் செல்லும் பேருந்து என்ற அடிப்படையில் தான் பேருந்தில் ஏறி கண்காணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கும் புலனாய்வாளர்களுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவ்விடத்தில் நின்ற மற்றுமொருவர் தானும் புலனாய்வாளர் எனக் கூறியதுடன், மாணவர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.