தொடர் மழையால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றில் இருந்து 1,177 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் உள்ள, ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 12 நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவற்றின் காரணமாக நேற்று 885 கன அடியாக இருந்த நிலையில் இன்று 2,071 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 50.75 அடியாக நீர்மட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க… கோயம்பேடு சந்தையில் ரூ.100-ஐ தொட்டது ஒரு கிலோ தக்காளி விலை! காரணம் என்ன?
அணை நீர்மட்டம், 48 அடியை எட்டினால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது தென்பெண்ணை ஆற்றில் 1,177 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலுார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ ஆற்றில் இறங்கக்கூடாது என்றும், ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்க கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM