பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோ அமைப்பில் இணைவதற்காக முறைப்படி விண்ணப்பம் அளித்துள்ள நிலையில், ஜேர்மனி முதலான நாடுகள், அந்நாடுகளுக்கு தங்கள் ஆதரவை அளிப்பதாக உறுதியளித்துள்ளன.
ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz கூறும்போது, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுடன், ஜேர்மனி போர் ஒத்திகையில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்.
நாங்கள் பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடனான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்போம், குறிப்பாக பால்டிக் கடற்பகுதியில் கூட்டுப் போர் பயிற்சி மேற்கொள்வோம் என்றார் அவர்.
மேலும், பின்லாந்தும் ஸ்வீடனும் எங்கள் ஆதரவை நம்பலாம், குறிப்பாக இப்போதிருக்கும் விசேஷித்த சூழலின்போது, என்று கூறினார் Olaf Scholz.
இதற்கிடையில், ஜேர்மனி மட்டுமின்றி, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும், அவை நேட்டோ அமைப்பில் முறைப்படி இணைவதற்கு முன்பே தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.