புதுடெல்லி: நாடு முழுவதும் மொத்தம் 45 ஒன்றிய பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்த ஆண்டு முதல் இந்த பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, கியூட் என்னும் நுழைவு தேர்வு அடிப்படையில்தான் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இந்நிலையில், யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று டெல்லியில் அளித்த பேட்டியில், ‘‘இந்த கல்வியாண்டு முதல் பல்கலைக் கழக பட்டமேற்படிப்புகளுக்கும் கியூட் நுழைவு தேர்வு அறிமுகப்படுத்தப்படும். இந்த தேர்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் நடைபெறும். இதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் நேற்று முதல் துவங்கி உள்ளன. விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜூன் 18ம் தேதி. இந்த தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்படும்,’’ என்றார்.