பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் தலைவராக நீடிப்பதாகவும், தான் முன்னர் கூறியது போன்று பதவி விலகப் போவதில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் கடனை மறுசீரமைப்பதற்கான திட்டங்களை இலங்கை மத்திய வங்கி இறுதி செய்துள்ளதாகவும், விரைவில் அமைச்சரவையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மத்திய வங்கி எடுக்கும் எந்த நடவடிக்கையும் வெற்றியடையாது என்பதால், அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால் பதவி விலகுவேன் என கலாநிதி நந்தலால் வீரசிங்க கடந்த 11ம் திகதி அறிவித்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் சாதகமான அரசியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். முன்னர், பிரதமரும் இல்லை அமைச்சரவையும் இல்லை. தற்போது ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், விரைவில் ஒரு நிதியமைச்சர் நியமிக்கப்படுவதை நான் விரும்புகிறேன். இப்போது நாங்கள் முன்னேற்றங்களை காண்கிறோம், எனவே அந்த அடிப்படையில் நான் பதவியில் தொடர விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச அண்மையில் விலகினார். இதனை தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதம் தற்போது வரையில் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ள போதிலும் நிதி அமைச்சரை இன்னும் நியமிக்கவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வரிகுறைப்பு, கோவிட் தொற்று நோய் என்பன இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் நாடு முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கடன் தொடர்பான பிரேரணைகள் ஏறக்குறைய தயாராக இருப்பதாகவும், வெள்ளிக்கிழமைக்குள் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படலாம் என்றும் மத்திய வங்கியின் ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இரண்டு மாதங்களில் பணவீக்கம் 40 விகிதமாக உயரக்கூடும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 29.8 விகிதமா உயர்ந்தது, உணவுப் பொருட்களின் விலைகள் ஆண்டுக்கு ஆண்டு 46.6 விகிதமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.