பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதால் அவர் குற்றவாளி என்று டெல்லி என்ஐஏ நீதிமன்றம் ( தேசிய புலானாய்வு அமைப்பு நீதிமன்றம்) தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு இந்த வழக்கில் என்ன தண்டனை என்ற விவரம் வரும் 25 ஆம் தேதி (மே 25) தெரிவிக்கப்படும்.
தடைசெய்யப்பட்ட ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் ‘பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டி’ தந்த குற்றச்சாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் பலகட்டங்களாக என்ஐஏ விசாரணை செய்தது. இந்நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
மேலும், யாசின் மாலிக்கின் சொத்து விவரம் குறித்து அவரிடம் பிரமாணப் பத்திரம் பெற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு என்ஐஏ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, மாலிக் தன் மீது சட்டப்பிரிவு 16 (தீவிரவாத சட்டம்) 17, (தீவிரவாதத்துக்கு நிதி திரட்டுதல்), 18 (சதி மற்று தீவிரவாத செயல்கள் செய்தலோ, 20 ( தீவிவரவாத குழுவில் உறுப்பினராக இருத்தல்), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்பிரிவு 120 பி, 124 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை எதிர்க்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், யாசின் மாலிக் சுதந்திரப் போராட்டம் என்ற பெயரில் ஜம்மு காஷ்மீரில் யாசின் மாலிக் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளார். உலகம் முழுவதும் இருந்து அவர் இதற்காக நிதியுதவி பெற்றுள்ளார். இதற்காக மிகப்பெரிய கட்டமைப்பை அவர் உருவாக்கி செயல்பட்டு வந்துள்ளார் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.