பருத்தி மற்றும் நூல் விலை உயர்வுக்குத் தீர்வு காணப்படும் – அமைச்சர் பியூஷ் கோயல்

பஞ்சு, நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இந்திய பருத்தி கவுன்சிலை  மத்திய அரசு உருவாக்கியுள்ளது. கவுன்சிலின் முதல் கூட்டம் மே 28ஆம் நாள் நடைபெறும் என்று மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் பருத்தி உற்பத்தி சார்ந்த வர்த்தகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பருத்தி விவசாயிகள், நூற்பாலைகள் மற்றும் நெசவாளர்களின் நலன்களைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று பியூஷ் கோயல் தெரிவித்தார். பருத்தி மற்றும் நூலை முதலில் உள்நாட்டுத் தொழிலுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அமைச்சர், மீதமுள்ளவற்றை ஏற்றுமதிக்குப் பயன்படுத்தலாம் என யோசனை தெரிவித்தார். நாட்டில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்கும் உள்நாட்டு தொழில்துறை பாதிப்படையும் வகையில் ஏற்றுமதி இருக்கக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வுக்குத் தீர்வு காணப்படும் எனவும் பியுஸ் கோயல் உறுதி அளித்தார். பருத்தி கழகம் மற்றும் பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிநிதியான நிபுணர் சுரேஷ் அமிர்தலால் கோடக் தலைமையில் இந்திய பருத்திக் கவுன்சில் அமைக்கப்படும் என்றும், இந்த கவுன்சிலின் முதல் கூட்டம் மே 28-ஆம் தேதி நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பருத்தித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதுடன் விவாதங்களையும் இந்த கவுன்சில் நடத்தும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார் .

இதனிடையே, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஸ்கோயல் ஆகியோரை கனிமொழி தலைமையிலான தமிழக எம்பிக்கள் சந்தித்து நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.