பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும் நெருக்கடியை காரணமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஒரு காரணமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பில் அழுத்தங்களைப் பிரயோகிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

13ஆவது யுத்த வீரர்கள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்..

தேசிய படைவீரர்கள் தினச் செய்தி

தாய் நாட்டின் சுதந்திரத்தையும், நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்த, வீரமிக்க படைவீரர்களை  நாம் என்றும் மறக்க மாட்டோம். அவர்களின் தியாகத்தின் உயிர்ச்சக்தியை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம் என்பதே அதற்குக் காரணம். எனவே, இந்த ஆண்டும் தேசிய நோக்கத்திற்காக படைவீரர்கள் ஆற்றிய மகத்தான தியாகங்களை நினைவுகூர்ந்து தேசிய படைவீரர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

இன்று நாம் எதிர்நோக்கும் நெருக்கடியான நிலை நம்மில் எவரும் எதிர்பார்த்தது அல்ல. பொருளாதார நெருக்கடியானது, அரசியல் மற்றும் சமூக சிக்கலான நிலை வரை வியாபித்தது. எவ்வாறாயினும், இந்த நாட்டின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்துக்கான கொள்கையை நாங்கள் குறைத்து மதிப்பிட மாட்டோம். ஏனென்றால் எல்லாவற்றிற்கும் மேலாக தாய் நாட்டைக் காக்க வேண்டும் என்ற அபிலாஷை இருப்பதனால் ஆகும்.

மனிதாபிமான நடவடிக்கைகளின் மூலம் யுத்தத்தின் சாபத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்தியவர்கள் எமது வீர வீராங்கனைகள். வெறுப்பும், கோபமும், பழிவாங்கலும் அதில் இருக்கவில்லை. எனவே, அமைதியான தாய் நாட்டில் இனவாதத்திற்கோ வேறு எந்த தீவிரவாதத்திற்கோ இடமில்லை. இலங்கை சமூகத்தில் ஒரு தனித்துவமான பெறுமதியாக நாங்கள் இதனைக் கருதுகிறோம்.

வரலாற்றில் பல சவாலான காலகட்டங்களையும் சந்தர்ப்பங்களையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசாபிமானிகள் எப்போதும் முன்னிலை வகித்தனர் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த குழு நாட்டின் ஒட்டுமொத்த படை வீரரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே, தற்போதைய சவாலை இன்னும் உன்னிப்பாகப் பார்க்கும் பொறுப்பை வரலாறு உங்களுக்கு வழங்கியுள்ளது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு குழுக்களும் தனிநபர்களும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஒரு காரணமாக பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பில் அலுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சிக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. நாம் அதனை ஒன்றுபட்டு முறியடிக்க வேண்டும். அப்போதுதான் துணிச்சலான போர் வீரனின் நாட்டிற்கான அர்ப்பணிப்பு பாதுகாக்கப்படும்.

தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு, சுதந்திர நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் அங்கவீனமடைந்த வீர வீராங்கனைகளுக்கு எனது கெளரவமான மரியாதையை செலுத்துகிறேன்.

 கோட்டாபய  ராஜபக்க்ஷ

2022 மே மாதம் 19ஆம் திகதி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.