வாஷிங்டன்: பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவே ரஷ்யாவின் எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதாக அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் அடங்கிய ராணுவ சேவைகள் குழுவின் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் அந்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பெரியர் பேசியதாவது:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அமைப்புகள் தங்கள் மீதான தாக்குதலை அதிகரிக்கும் என இந்தியா கவலை அடைந்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம் ஆண்டின் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதிலும், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்துகிறது.
மேலும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருகிறது. இதுபோல, கடந்த 2020-ல் லடாக் எல்லையில் சீன ராணுவமும் அத்துமீறி நுழைய முயன்றது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டது. இதனால் இந்தியா-சீனா இடை யிலான உறவு சீர்குலைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி எஸ்-400 ரக ஏவுகணைகளின் முதல் தொகுப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியா பெற்றது. இதை இந்திய பாதுகாப்பு படையில் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அடுத்த மாதம் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது.
மேலும் தனது போர் திறனை மேம்படுத்துவதற்காக, முப்படைகளை ஒருங்கிணைக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக தரை, வான், கடல் என முப்படைகளின் தளவாடங்களை நவீனமயமாக்கி வருகிறது. குறிப்பாக, உள்நாட்டிலேயே ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் இறக்குமதி குறைந்து இந்திய பொருளாதாரமும் வலுவடையும் என இந்தியா கருதுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.