கொலைகாரர்களும், சிறுமிகளையும் பெண்களையும் சீரழித்தோரும், நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பிவிட்டார்கள் என கொந்தளிக்கிறார் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.
விடயம் என்னவென்றால், 112 சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவிலிருந்து நேற்று ஜமைக்கா நாட்டிற்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில், வெறும் ஏழு பேர் மட்டுமே நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.
அதற்குக் காரணம், அந்த புலம்பெயர்ந்தோர் சார்பில், கடைசி நேரத்தில், நீதிமன்ற மீளாய்வு வேண்டும், அவர்கள் நவயுக அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றெல்லாம் கூறி சட்டத்தரணிகள் மேல்முறையீடுகள் செய்துள்ளதுதான்.
இப்படி நவயுக அடிமைத்தனத்துக்கு உட்படுத்தப்பட்டவர்கள் புகாரளிக்கும் பட்சத்தில் அவர்களுடைய புலம்பெயர்தல் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என்பதால், அவர்களை நாடுகடத்த முடியாது.
இப்படியே சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் குறுக்கீடு செய்வதன் காரணமாக, பல கொலைகாரர்களும், சிறுமிகளையும் பெண்களையும் சீரழித்தோரும், நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பிவிட்டார்கள். அவர்கள் நம் நாட்டின் தெருக்களிலேயே நடமாடுகிறார்கள் என்று கூறி தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரீத்தி பட்டேல்.
ஆனால், இது இப்படியே தொடரமுடியாது என்று கூறியுள்ள பிரீத்தி, நமது தேசிய மற்றும் எல்லைகள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி இப்படி கடைசி நேரத்தில் நாடுகடத்தல்களைத் தடுக்கும் முயற்சிகளுக்கு முடிவு கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார்.
அவர் சொல்வது என்னவென்றால், இதுபோல ஒரு சட்ட விரோத புலம்பெயர்வோர் தொடர்பில் நீதிமன்றம் செல்ல விரும்புவோர், இனி கடைசி நேரத்தில் நீதிமன்றம் சென்று அதைத் தடுக்கமுடியாது.
அப்படி ஏதாவது முறையீடு செய்யவேண்டுமானால், அந்த வழக்கு துவங்கிய உடனேயே அது தொடர்பான வாதங்கள் முன்வைக்கப்படவேண்டுமேயொழிய, கடைசி நேரத்தில் முறையீடு செய்து இதுபோல் நாடுகடத்தல்களை தடுத்து நிறுத்தமுடியாது. இந்த மாற்றங்கள் விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளன என்பதைத்தான் பிரீத்தி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.