புதுடெல்லி: சட்ட விரோத பணபரிவர்த்தனை வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கை குற்றவாளி என டெல்லி என்ஐஏ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனை விவரங்கள் மே 25ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான முகமது யாசின் மாலிக், பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறி கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுதல், காஷ்மீர் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட யாசின் மாலிக், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக் கொண்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி என்ஐஏ நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், யாசின் மாலிக் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கான தண்டனை விவரம் வரும் 25ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.பாக். கண்டனம்: பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘யாசின் மாலிக் மீது இந்தியா பொய்யான குற்றச்சாட்டுகளை ஜோடித்துள்ளது. இதற்காக இந்தியத் தூதரை நேரில் வரவழைத்து பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.