பெங்களூரூவில் நடுரோட்டில் தனியார் பள்ளிகளின் மாணவிகள் குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரூ கப்பன்பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2 தனியார் பள்ளிகள் உள்ளன. 2 பள்ளிகளும் அருகருகே அமைந்துள்ள நிலையில், 2 பள்ளிகளின் மாணவிகளும் திடீரென்று நடுரோட்டில் சண்டையிட்டுக் கொண்டனர். மாணவிகள், ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதோடு சில மாணவிகள், குடுமியை பிடித்து இழுத்து சண்டை போட்டனர். மாணவிகள் நடுரோட்டில் மோதிக் கொள்வதை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், 2 பள்ளிகளின் மாணவிகளும் நடுரோட்டில் வைத்து மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவிகள் மோதல் பற்றியோ, சண்டையில் காயம் அடைந்த மாணவிகளோ கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவியதை தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட கப்பன்பார்க் போலீசார், 2 பள்ளிகளுக்கும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
;.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM