இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன.
இது குறித்து G7 நாடுகளின் நிதித் தலைவர்கள் ஜேர்மனியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடன் செலுத்துவதை இலங்கை நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், இந்தியப் பெருங்கடல் தேசத்திற்கான நீண்டகால தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதியாக இருப்பதாகவும், சாத்தியமான கடன் திட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் G7 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
G7 என்பது உலகின் ஏழு பெரிய “மேம்பட்ட” பொருளாதாரங்கள் என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பாகும், இது உலக வர்த்தகம் மற்றும் சர்வதேச நிதி அமைப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது.
கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.