பேரறிவாளனை தொடர்ந்து மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்- சீமான் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் பூந்தமல்லியில் இன எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு:
* இனப்படுகொலைக்கு உள்ளாகி, உயிர், உரிமை, உடமை, நிலம் என அனைத்தையும் இழந்து நிற்கும் எம் மக்களுக்கு தனித்தமிழீழம் மட்டுமே தீர்வாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து இந்திய ஒன்றிய அரசு பொதுவாக்கெடுப்பிற்கான முன்னெடுப்புகளைச் செய்ய பன்னாட்டுச்சமூகத்திற்கு அரசியல் நெருக்கடி தர வேண்டும் எனவும், அதற்கான உரிய அரசியல் அழுத்தங்களை ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பில் தமிழக அரசு இந்திய ஒன்றிய அரசிற்குத் தர வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
இனப்படுகொலை குறித்துப் பன்னாட்டு போர்க்குற்ற விசாரணையை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
சிங்களக் குடியேற்றங்களால் பறிக்கப்பட்ட தமிழர் மண்ணை மீட்டு, மீண்டும் எம் மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும், இதற்கான வலிமையான அரசியல் அழுத்தங்களை இந்திய ஒன்றிய அரசு இலங்கை அரசுக்குக் கொடுத்திட வேண்டும்.
இனப்படு கொலையாளன் மகிந்தா ராஜபக்சேவிற்கு இந்திய அரசு எவ்வித அடைக்கலமும் தரக்கூடாது.
போரின்போதும், போருக்குப் பின்பும், தாய்த்தமிழ்நாட்டை நாடி வந்த எம் ரத்த உறவுகளான தமிழீழச்சொந்தங்களை, ‘சிறப்பு முகாம்கள்’ என்ற பெயரில் திறந்த வெளிச்சிறைக் கூடங்களுக்குள் அடைத்து வதைக்கும் போக்கை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட வேண்டும்.
தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்படுவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த இந்திய ஒன்றிய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தப் பிறகு, தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செயப்படுவதும் அதிகரித்துள்ளதை நாம் தமிழர் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
நாடாளுமன்றத்தில் தமக்குள்ள அதிகாரப்பலத்தை பயன்படுத்தி தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய அரசிற்கு தி.மு.க. அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.
31 ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு, விடுதலை கிடைத்திருந்தாலும், பேரறிவாளனுக்கு இன்று கிடைத்திருக்கும் நீதியை இந்த இன எழுச்சி நாளின் சிறப்பாகவே கருதி நாம் தமிழர் கட்சி பெருமகிழ்ச்சியோடு அதனை வரவேற்கிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர்கள் பி.ஆர். கவாய் மற்றும் நாகேஸ்வரராவ் ஆகியோரது அமர்வுக்கு இப்பொதுக்கூட்டத்தின் வழியே நாம் தமிழர் கட்சி தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. 
எழுவரை விடுதலை செய்யும் தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாது, அரசியலமைப்புச்சாசனத்திற்கு எதிராக மூன்று ஆண்டுகள் காலந்தாழ்த்திய தமிழ்நாடு கவர்னருக்கு இப்பொதுக்கூட்டம் வாயிலாக கண்டனங்களைப் பதிவு செய்வதோடு, இவ்வழக்கில் சிக்கி இன்னும் சிறைக்கொட்டடியில் வாடி வருகிற முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ஆகிய 6 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், கவர்னரோ, ஆட்சியாளர்களோ இனியும் அவர்களது விடுதலையில் குறுக்கிட்டு, காலந்தாழ்த்த கூடாது எனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தடா. சந்திரசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ராவணன், ஜெகதீசன், அன்பு தென்னரசன், கதிர் ராஜேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ஈரா.மகேந்திரன், மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஸ்ரீதர், தென்சென்னை தொகுதி பொறுப்பாளர் தியாகராஜன், மருத்துவர்கள் சிவக்குமார், ரமேஷ், மாவட்ட செயலாளர் புகழேந்தி மாறன், மாநில பொறுப்பாளர்கள் பாக்யராசன், செந்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் விக்னேஷ், வினோத், ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.