பேரறிவாளன் திமுக, அதிமுக தலைவர்களை சந்தித்த நிலையில், தற்போது மதிமுக பொதுச் செயளாலர் வைகோவை சந்தித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சந்தித்த பேரறிவாளன், இன்று மதிமுக பொதுச் செயளாலர் வைகோவை சந்தித்து நன்றி தெரிவித்தார். சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனது தாயாருடன் பேரறிவாளன் சந்தித்து பேசினார்.
அவர்களது சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
‘பேரறிவாளன் ஈழ உணர்வுள்ளவர், ஆனால் உண்மையில் நிரபராதி, எந்த குற்றமுமற்றவர். அவருக்கு அதில் எந்த தொடர்பும் கிடையாது. இறுதியில் நீதி வென்றது.
இங்கு இருக்கின்ற ஆளுநர் அரசாங்கத்தின் முடிவை செயல்படுத்தாமல் இருந்தார். கடைசியில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, 142வது பிரிவை பயன்படுத்தி விடுதலை அவருக்கு வாழ்வு கொடுத்துள்ளது.
ஆனால் அவரது இளமை காலம் அழிந்துவிட்டது, வசந்த காலம் எல்லாம் போய்விட்டது. அவரது தாயார் அற்புதம்மாள் அவர்கள் மிகப்பெரிய வீராங்கனையாக இருந்து போராடினார். யாராக இருந்தாலும் தளர்ந்து விடுவார்கள், கவலையில் ஆழ்ந்துவிடுவார்கள். ஆனால் அற்புதம்மாள் இன்று எமன் வாயில் இருந்து மகனை மீட்டுக் கொண்டுவந்துள்ளார். இதன் அடிப்படையிலேயே மீதமுள்ள 6 பெரும் விடுதலையாகிவிடுவார்கள்’ என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன்,
‘சிறையில் பொடா காலத்தில் நாங்கள் இருந்தோம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியிடம் போய் எங்களுக்காக பேசியிருக்கிறார், மனு கொடுத்துள்ளார். மேலும் ஐயா வாஜ்பாயிடமும் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர், தூக்கு தண்டனை என்று வரும்போது மரணதண்டனைக்கு எதிராக போராடிய மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, இந்த வழக்கிற்கு வந்த பிறகு தான் மிகப்பெரிய மாற்றத்தை இந்த வழக்கு சந்தித்தது.
பல மூத்த வழக்கறிஞர்களும் இந்த வழக்கிற்கு வருவதற்கு அது ஒரு தூண்டுகோலாக இருந்தது. அவர் வந்ததற்கு முழு காரணம் வைகோ அவர்கள் தான். எனவே அவரை சந்தித்து நன்றி தெரிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள தான் நாங்கள் இங்கு வந்தோம்’ என தெரிவித்தார்.