BJP leader Annamalai press meet about Perarivalan release: பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டப்போது, தமிழகத்தில் இருந்த திமுக அரசு, சந்திரசேகர் தலைமையிலான மத்திய அரசால் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இதனை காங்கிரஸ் ஆதரித்தது. தமிழகம் கவர்னர் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் ராஜீவ் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட பின்னர், பலர் கைது செய்யப்பட்டனர். அதில் குறிப்பாக, ஜூன் 11, 1991 அன்று பேரறிவாளன் சிபிஐயால் கைது செய்யப்பட்டார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில், தடா நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை 1999ல் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை நாம் மறந்து விடக்கூடாது. இதில் பலர் கருணை மனு அளித்து விடுவிக்கப்பட்டனர். தற்போது உச்ச நீதிமன்றம் தனது உச்சப்பட்ச அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுத்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளன் நிரபாராதி என உச்ச நீதிமன்றம் விடுதலை செய்யவில்லை.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொண்டாலும், இது தனித்துவமான சிறப்பு தீர்ப்பாக உள்ளது. ஏனெனில் 7 பேரை விடுவிக்க கோரி தமிழகத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை கவர்னர் அவர்கள் இதில் என்ன முடிவு எடுத்தார் என்பதை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் கவர்னர் முடிவெடுக்க வேண்டுமா அல்லது அவர் குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டுமா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. கவர்னர் அமைச்சரவை தீர்மானத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது இல்லை என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் உள்ளது. உச்ச நீதிமன்றம் இவர்களுக்கான மரண தண்டனையை குறைக்கும்போதே, தெளிவாக கூறியுள்ளது, நீண்ட காலமாக மரண தண்டனைக்கு காத்திருப்பதால் தான் தண்டனை குறைக்கப்படுகிறது என்று. இவர்கள் குற்றவாளிகள் என்பதை எப்போதும் மறக்க கூடாது. இவர்கள் முன்னாள் பிரதமரை கொன்றவர்கள். அது சிபிஐ விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நம் முதலமைச்சர், ஒரு நிரபராதியை விடுதலை செய்ததுபோல் கொண்டாடுவதை பார்க்கும்போது, முதலமைச்சர் உண்மையில் அரசியலமைப்பு மீது சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளாரா என்ற சந்தேகம் வருகிறது. முதலமைச்சர் நேர்மையாக நடந்துக் கொள்வாரா என்ற சந்தேகம் எழுகிறது. அதேபோல் காங்கிரஸ் இரட்டை நிலைப்பாடு எடுத்து, தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. தங்கள் கட்சி பிரதமரை கொன்றவர்களின் விடுதலையை திமுக வரவேற்று நிலையில், அவர்களுடன் எப்படி சித்தாந்த அடிப்படையில் காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. வெறுமனே அறப்போராட்டம் அறிவித்துவிட்டு, ராஜ்ய சபா சீட்டுக்காக திமுகவிடம் நிற்பது தமிழக மக்களை முட்டாளாக்கும் செயல்.
பாஜகவைப் பொறுத்தவரை 7 பேரும் குற்றவாளிகளே. உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்கிறோம். மேலும் ராஜீவ் காந்தியுடன் 17 பேர் இறந்துள்ளனர். அவர்கள் இறப்புக்கான நீதி என்ன? இந்த தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டியது அல்ல. திமுக தவறான முன்னுதாரணத்தை எடுத்து வருகிறது. முதலமைச்சர் ஏர்போர்ட் போய் பேரறிவாளனை கட்டி தழுவி வரவேற்பது தவறான முன்னுதாரணம்.
மேலும், தீர்ப்பில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே உள்ள கூட்டாட்சி தத்துவத்தைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அப்படி இருக்கும்போது நம் முதலமைச்சர் கூட்டாட்சி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறுவது ஆச்சரியமாக உள்ளது. திமுகவைப் பொறுத்தவரை இந்த தீர்ப்பு காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான். அவர்கள் கொண்டாட வேண்டியதில்லை என்று அண்ணாமலை கூறினார்.
இதையும் படியுங்கள்: திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை நிறுவ ஐகோர்ட் தடை
பின்னர் செய்தியாளர்கள், அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது குறித்து கேட்டதற்கு, அதிமுக இதை கொண்டாடவில்லை. அதிமுகவின் நிலைப்பாடு இவர்கள் குற்றவாளிகள் என்பதுதான். ஆனால் திமுக அவர்கள் குற்றவாளிகள் என்று எந்த இடத்திலும் கூற மறுக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
பின்னர் மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா என்ற கேள்விக்கு, இது குறித்து மரண தண்டனை குறைப்பு சமயத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பிலே தெளிவாக கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பேரறிவாளன் பரோலிலே இருக்கிறார். சிஸ்டத்தை திமுக கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந்த தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தாது. இது பேரறிவாளனுக்கு மட்டும் பொருந்தக் கூடியது. இது அவரது நன்னடத்தைக்காகவே வழங்கப்பட்டுள்ளது. எனவே மற்றவர்களுக்கு பொருந்தாது.