சென்னை: பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.
கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா? ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, திருச்சி, கோவை,வேலூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் சார்பில் 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கிளிடம் பேசிய அழகிரி, “பேரறிவாளன் குற்றவாளி இல்லை என்றோ, கொலை குற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்றோ உச்ச நீதிமன்றம் கூறவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தினார் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு, நீதி பரிபாலனம் வழியாக ஏற்பட்ட தவறைக் காரணம் காட்டி விடுதலை செய்துள்ளார்கள்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், குற்றவாளியை எப்படி நடத்த வேண்டும் என்ற நடைமுறை தேசத்தில் உள்ளது. அதை தகர்த்து எறியும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது என்று நாங்கள் வருந்துகிறோம். ராஜீவ் காந்தியுடன் சேர்ந்து 17 பேர் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் குடும்பத்திற்கு பதில் என்ன?
அற்புதம் அம்மாளின் மனநிலையை நான் அறிவேன். ஒரு தாய் எவ்வாறு சிந்திப்பரோ, அப்படி தான் அவர் சிந்தித்து உள்ளார். ராஜீவ் காந்திக்கும் தாய் உள்ளார். கொலை செய்யப்பட்ட 17 பேருக்கும் தாய் உள்ளனர். அவர்களுடைய மன நிலையை யார் அறிந்து கொண்டார்கள். என்ன மன நிலை இது. ஒரு கொலைகாரருக்கு இந்த அளவு பணிந்து பேசுதை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? நாகரிகமான தமிழ்ச் சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? இது நியாமற்ற செயல்” என்று தெரிவித்தார்.