தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை எம்பி பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதனால் காலியாகும் 52 இடங்களுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டிகேஎஸ் இளங்கோவன், ஆர் எஸ் பாரதி, ராஜேஷ்குமார், நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், எஸ். ஆர் சுப்பிரமணியன் ஆகிய 6 பேரின் பதவி காலம் ஜூன் 29-ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி சார்பில் 4 இடங்களில் உள்ளது. அதில் திமுக சார்பில் 3 பேரும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ரமேஷ்குமார், கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டு பேரில் யார் என்பதை கட்சியின் தலைமை இதுவரை அறிவிக்கவில்லை. இதனிடையே இன்று அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாநிலங்களவை வேட்பாளரை முடிவு செய்து அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.