கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், நூறு ஆண்டுகள் சாதனை என போற்றும் அளவுக்கு சிறப்பாக மக்கள் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கரூர் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, காவிரியாற்றில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவிற்கு புதிய கதவணை, தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
வேளாண் கல்லூரி கரூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டு, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் துவங்கி உள்ளது. அதேபோல, அரவக்குறிச்சியில் கலை அறிவியல் கல்லூரி தரகம்பட்டியில் கலை அறிவியல் கல்லூரி என புதிய கட்டடம் கட்டும் பணி என கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒருசேர வளர்ச்சி திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். நிலக்கரி கையிருப்பை பொறுத்தவரையில், இன்னும் அடுத்த ஏழு நாட்களுக்கு கையிருப்பு உள்ளது. நேற்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றாலைகளில் தயாரிக்கப்படும் மின்சாரம் வீணாக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், மழைக்காலங்களில் மின் தொகுப்புகளை சமமாக வைக்கவில்லை என்றால், பழுது ஆகும் சூழ்நிலை ஏற்படும். இதனால், தற்போது உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
அனல் மின் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 2,000 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. 60 சதவீத மின் உற்பத்தி கட்டாயம் செய்தாக வேண்டும். காற்றாலைகளில் கிடைக்கும் மின் உற்பத்தியில் பழுது ஏற்பட்டால், அதனை சமமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருக்கும் தெரியும். அவருக்கு தெரிவிக்க விரும்புவதெல்லாம், இரண்டு மணி நேரம் மின் நுகர்வு குறைந்த காரணத்தினால் காற்றாலை உற்பத்தியில் இருந்து தேவையான அளவு மட்டுமே மின் நுகர்வுகாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மின் நுகர்வு குறைந்துள்ள காரணத்தினால், சோலார், காற்றாலை, அனல் மின் நிலையம் போன்றவற்றில் குறைந்த மின் உற்பத்தி மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வருகிறது. மற்ற மாநிலங்கள் கேட்டு விருப்பம் தெரிவித்தால், அங்கும் வழங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது.
நிலக்கரி பற்றாக்குறையால் குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கும் அளவுக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு உள்ளது. தமிழகத்தில் எவ்வித மின் வெட்டு இல்லை. மின்வெட்டு அறிவிப்பும் இல்லை. மத்திய தொகுப்பில் இருந்து 800 மெகாவாட் பற்றாக்குறையாக வழங்கப்பட்ட சூழ்நிலையில் ஏற்பட்ட மின் தடங்கல்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சொந்த உற்பத்தி மூலம் ஈடு செய்யப்பட்டது. இனி நிலக்கரி பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் முன் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அடுத்த ஏழு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. டெண்டர் முறையில் தமிழக முதலமைச்சர் 137 டாலர் விலைக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் நிலக்கரி டன் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்ததன் விளைவாக தற்போது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான நிலக்கரி விலை உயர்வு நேரத்தில் முன்னதாகவே முதலமைச்சரின் முன் முயற்சியால் நிலக்கரியை கொள்முதல் செய்துள்ளோம். டெண்டர் முறையில் விலை உயர்ந்த பிறகு அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கப்பட்டுள்ளது என எழுப்பப்படும் தேவையற்ற விமர்சனங்கள், முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டுள்ளது” என்றார்.