அகமதாபாத்: குஜராத் காங்கிரஸ் கட்சியில் மிக மோசமான சாதி அரசியல் உள்ளது, மூன்றாண்டுகளை அந்த கட்சியில் வீணாக்கி விட்டேன் என அக்கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்க்கக் கூறி கடந்த 2012 ஆம் ஆண்டு `சர்தார் பட்டேல் குழு’ என்ற அமைப்பை தொடங்கி போராடியவர் ஹர்திக் படேல். அந்த அமைப்பின் மூலம் குறுகியகாலத்தில் பட்டேல் சமூக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய பேரணியையும், போராட்டத்தையும் முன்னெடுத்தார். 2015, ஜூலை மாதத்தில் அவர் தொடங்கிய போராட்டம், குஜராத் முழுவதுமே பரவியது. படேல் சமூகத்தினரின் பேராதரவுடன் குஜராத் மாநிலமே ஸ்தம்பித்தது.
2017 குஜராத் சட்டப்பேர்வைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்து, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். 2020-ம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஹர்திக் படேல்.
கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த அவர் நேற்று காங்கிரஸில் இருந்து வெளியேறினார். அவர் விரைவில் பாஜகவில் இணையப்போவதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் அவர் அகமதாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் காங்கிரஸ் கட்சியில் முன்பு இணையும்போது வேண்டாம் என படேல் சமூகத்தின் மூத்த தலைவர்கள் என்னைத் தடுத்தனர். அவர்கள் பேச்சை மீறி நான் காங்கிரஸில் இணைந்தேன். நான் செய்த தவற்றை இப்போது உணர்ந்துவிட்டேன்.
2017 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு கேட்டதற்கு பொது மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குஜராத் மக்கள் காங்கிரஸ் கட்சியை நம்ப வேண்டாம். கடந்த 33 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியை 7-8 நபர்கள் மட்டுமே நடத்தி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் தாஹோத் ஆதிவாசி சத்தியாகிரகப் பேரணியில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். ஆனால் 70 ஆயிரம்பேர் கலந்துகொண்டதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள். இதுதான் காங்கிரஸ் கட்சியின் ஊழல். இங்குள்ள சில தலைவர்கள் பொய் கணக்கு காட்டியே தங்களை வளர்த்துக் கொள்கின்றனர். கட்சித் தலைமையும் அவர்களை நம்புகிறது.
குஜராத் காங்கிரஸ் கட்சியில் மிக மோசமான சாதி அரசியல் உள்ளது. செயல் தலைவர் பதவி எல்லாம் வெறும் பெயரளவில் தான் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒதுக்கியே வைத்துள்ளனர். எனக்குக் கட்சியில் எந்தவொரு அதிகாரமும் வழங்கப்படவில்லை. மூன்றாண்டுகளை அந்த கட்சியில் நான் வீணாக்கி விட்டேன். பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.